PUBLISHED ON : அக் 14, 2024 12:00 AM

'தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன், முதல்வர் பதவியை பெறுவதற்கு அடிதடி சண்டை போட்டவர்கள், முடிவு வெளியானதும், ஒட்டு மொத்த பழியையும் துாக்கி என்மீது போடுகின்றனர்...' என கொதிக்கிறார், ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா.
ஹரியானாவில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாமே, 'காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்' என்றுதான் கூறின.
இதனால், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், முதல்வர் பதவியை பெறுவது யார் என்பதில், பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
திடீர் திருப்பமாக, பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரசில், முதல்வர் பதவி போட்டிக்கு வேலையே இல்லாமல் போய் விட்டது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க, சண்டிகரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
'தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடா தான் காரணம்...' என கூறி, குமாரி செல்ஜா, சுர்ஜேவாலா போன்றோர், அந்த கூட்டத்தை புறக்கணித்தனர். வந்திருந்த சில உள்ளூர் நிர்வாகிகளும், ஹூடாவை கடுமையாக விமர்சித்தனர்.
இதனால் கடுப்பான அவர், 'வெற்றி பெற்றால் பதவியை பங்கு போட வருவர்; தோல்வி அடைந்தால், என்மீது பழி போட்டு, ஓடி விடுவர். இது, நல்ல நியாயமாக இருக்கிறதே...' என, புலம்புகிறார்.