PUBLISHED ON : பிப் 17, 2024 12:00 AM

'மலரும் நினைவுகளை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து விடுகிறார்...' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலரான சீதாராம் யெச்சூரி குறித்து கூறுகின்றனர், காம்ரேட்கள்.
சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டம் நடந்தது.
அப்போது சீதாராம் யெச்சூரி, 'மார்க்சிஸ்ட் மூத்த தலைவரான, மேற்கு வங்க முன்னாள் முதல்வர், மறைந்த ஜோதிபாசு, என்னை எப்போதும் குழப்பவாதி என்று தான் அழைப்பார்...' என்றார். இதைக் கேட்ட மற்ற தலைவர்கள், 'ஏன் அவ்வாறு அழைத்தார்?' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த யெச்சூரி, 'எனக்கு ஒரு பழக்கம் உண்டு... யாருக்கு, எந்த மொழி நன்றாக தெரியுமோ, அவர்களிடம், அந்த மொழியில், அதாவது அவர்களது தாய்மொழியில் தான் பேசுவேன். ஜோதிபாசுவிடம் பெங்காலியிலும், சுர்ஜித்திடம் ஹிந்தியிலும் பேசுவேன்.
'இதை கவனித்த ஜோதிபாசு, 'எல்லா தலைவர்களும் ஒன்றாக ஒரு இடத்தில் இருக்கும்போது, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மொழியில் பேசுகிறீர்கள். அதனால், மற்றவர்களிடம் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என, அனைவருக்கும் புரியாது. இதனால் கட்சியில் குழப்பம் ஏற்படுகிறது' என்றார். இதை நினைத்துப் பார்த்தால், இப்போதும் சிரிப்பு வருகிறது...' என்றார்.
இதைக் கேட்ட சக நிர்வாகிகள், 'உண்மையிலேயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத் தான், ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு மொழியில் பேசினாரோ...' என, தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.