PUBLISHED ON : ஜூலை 19, 2025 12:00 AM

'இப்படிப்பட்ட விவகாரம் எல்லாம் கேரள அரசியலில் தான் நடக்கும்...' என, இங்குள்ள ஆளும் கட்சியினரை கிண்டல் அடிக்கின்றனர், இம்மாநில மக்கள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு ஏற்கனவே கவர்னராக இருந்த ஆரீப் முகமது கான், பல்வேறு விஷயங்களில் மாநில அரசுடன் மோதல் போக்கை பின்பற்றினார். கடந்த ஜனவரியில் ஆரீப் முகமது கானுக்கு பதிலாக, ராஜேந்திர அர்லேகர் என்பவர், கேரள கவர்னராக பொறுப்பேற்றார். ஆரீப் முகமது கான் போலவே, ராஜேந்திர அர்லேகரும், மாநில அரசுடன் மோதல் போக்கை தொடர்கிறார்.
இதையடுத்து, பல்கலை பாடங்களில், பா.ஜ., சித்தாந்தங்களை திணிப்பதாக கூறி, கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர், கேரளா முழுதும் சமீபத்தில் போராட்டங்களை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாணவர்கள், 'போலீஸ் அராஜகம் ஒழிக; ஆளும் கட்சி அராஜகம் ஒழிக...' என, கோஷங்களை எழுப்பினர்.
இதைப் பார்த்த கேரள மக்கள், 'ஆளும் கட்சியைச் சேர்ந்த மாணவர் அமைப்பினரே, தங்கள் ஆட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனரே...' என, கிண்டல் அடித்தனர்.
முதல்வர் பினராயி விஜயனோ, 'நம் கட்சியினருக்கே, நாம் ஆளும் கட்சி என்பது மறந்து போய் விட்டதா...' என, புலம்புகிறார்.

