PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:16 AM

'அரசு வழங்கும் சலுகையை தொடர்ந்து அனுபவித்தவர்களுக்கு, திடீரென அந்த சலுகை நிறுத்தப்பட்டால், அதை ஜீரணிப்பது கஷ்டமாகத் தானே இருக்கும்...' என, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.
பீஹாரில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி ஆகியோருக்கு, முன்னாள் முதல்வர்கள் என்ற அடிப்படையில், மாநில அரசு சார்பில், 'இசட் பிளஸ்' பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இவர்களுக்கு, 24 மணி நேரமும், 10 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக லாலுவுக்கும், அவரது மனைவிக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக முதல்வர் சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் அறிவித்தார்.
இதை கேட்டதும் லாலு கொந்தளித்து விட்டார். 'நாட்டில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களில் நானும் ஒருவன். ஏழு ஆண்டுகள் பீஹார் முதல்வராக பதவி வகித்துள்ளேன். என் மனைவி ஆறு ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்குடன் எங்களுக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர்...' என்றார்.
பீஹார் மக்களோ, 'உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு தானே பாதுகாப்பு வேண்டும். அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கு, பாதுகாப்பு என்ற பெயரில் எதற்கு அரசு பணத்தை வீணடிக்க வேண்டும்...' என்கின்றனர்.
