PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

'இந்த அரசியல்வாதிகளோடு பெரும் அக்கப்போராக இருக்கிறதே...' என, கவலைப்படுகின்றனர், டில்லி மக்கள்.
இங்கு, முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லி, யூனியன் பிரதேசம் என்பதால், பாதுகாப்பு உள்ளிட்ட சில விஷயங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், நிர்வாகம் சார்ந்த விஷயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இதனால், ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒருவர் மீதுஒருவர் குற்றம் சாட்டுவதுவழக்கமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதங்களில், டில்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில்எரிக்கப்படும் விவசாய கழிவுகளால் ஏற்படும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டம் காரணமாக, டில்லியில்வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். 'இந்த பிரச்னைக்கு தீர்வு காணவில்லை' என, மாநில அரசும், மத்திய அரசும் மாறி மாறி புகார் கூறி வருகின்றன.
டில்லியின் பல இடங்களில் பா.ஜ.,வினர் வைத்துள்ள போர்டுகளில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் படத்தை வரைந்து, 'ஆம் ஆத்மி ஆட்சியில் டில்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது' என்ற வாசகங்களை எழுதி வைத்துள்ளனர்.
பதிலுக்கு, ஆம் ஆத்மி கட்சியினர், 'மத்தியில் பா.ஜ.,வின் ஆட்சி காலம், டில்லிக்கு விஷ வாயு காலம்...' என, கிண்டலடித்து எழுதியுள்ளனர்.
டில்லி மக்களோ, 'பிரச்னைக்கு தீர்வு காண்பதை விடுத்து, குழாயடி சண்டை போடுகின்றனரே...' என, புலம்புகின்றனர்.