PUBLISHED ON : ஆக 05, 2025 12:00 AM

'அவரை புதிதாக ஏதாவது பேச சொல்லுங்கள்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது ஆத்திரப் படுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.
கடந்தாண்டு இறுதியில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது; காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது.
இதை ஜீரணிக்க முடியாத லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'தேர்தல் கமிஷன் துணையுடன், பா.ஜ ., வெற்றி பெற்றுள்ளது. சில தொகுதிகளில் திடீரென லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, முறைகேடு நடந்து உள்ளது...' என, குற்றச் சாட்டுகளை அடுக்கினார்.
இந்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் ஆதாரங்களுடன் மறுத்தும், ராகுல் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல், 'மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல, அதற்கு முன் நடந்த லோக்சபா தேர்தலிலும் முறைகேடு நடந்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த தற்கு முறைகேடு தான் காரணம்...' என, புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பா.ஜ., தலைவர்களோ, 'ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் லோக்சபா தேர்தலில் எப்படி வெற்றி பெற்றனர். கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற்றது.
'அங்கும், முறைகேடுகளால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றதா... ராகுல், இன்னும் எத்தனை நாளைக்குத் தான் பழைய பாட்டை பாடிக் கொண்டிருப்பார்...' என, பதிலடி கொடுத்துள்ளனர்.