PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM

'தானாக சென்று வலையில் சிக்குகிறாரே...' என, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான பினராயி விஜயன் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
கேரளாவில், சமீபத்தில் நடந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர், 'சனாதன தர்மம் என்பது, வர்ணாசிரமத்தை போதிக்கிறது; அது, குலத் தொழிலை ஊக்குவிக்கிறது...' என, பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு, கேரளாவில் உள்ள பா.ஜ., தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் என, பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
'பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், ஹிந்து அல்லாத மற்ற மதத்தினருக்கு ஆதரவாகவும் தன் கட்சி ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக, பினராயி விஜயன், சனாதன தர்மம் குறித்து பொய் பிரசாரம் செய்கிறார்...' என, பா.ஜ., தலைவர்கள் ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பினராயி விஜயனின் பேச்சுக்கு எதிராக, நீதிமன்றங்களில் வழக்கு தொடரவும், நாடு முழுதும் போராட்டம் நடத்தவும், பா.ஜ.,வினர் ஆலோசித்து வருகின்றனர்.
இதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், 'ஏற்கனவே நமக்கு தலை போகிற பல பிரச்னைகள் உள்ளன. தமிழகத்தில், சனாதனத்தை விமர்சித்துப் பேசிய பலர், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது இவருக்கு தெரியாதா... எதற்கு இந்த வேண்டாத வேலை...?' என, பினராயி விஜயனை நினைத்து புலம்புகின்றனர்.