PUBLISHED ON : மே 19, 2025 12:00 AM

'கொத்துக் கொத்தாக துாக்குகின்றனரே... அடுத்து நம்மையும் துாக்கி விடுவரோ...' என, பீதியில் உறைந்துள்ளார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங், தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இதற்கு முன், ஜெகன்மோகன் முதல்வராக இருந்தபோது, பழைய ஊழல் வழக்குகளை எல்லாம் துாசு தட்டி, சந்திரபாபு நாயுடுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.
ஜாமினில் வந்த சந்திரபாபு நாயுடு கடுமையாக பிரசாரம் செய்து, தற்போது ஆட்சியை பிடித்து விட்டார். இப்போது இவரது முறை. ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் மதுபானக் கொள்முதலில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார், சந்திரபாபு நாயுடு.
இந்த குழு, இரண்டு மாதங்களுக்கு முன் ஜெகனுக்கு மிக நெருக்கமான தொழில் அதிபரான காசிரெட்டியை கைது செய்தது.
சமீபத்தில், ஜெகன் ஆட்சிக் காலத்தில், அவரது தனிச் செயலர்களாக பதவி வகித்த தனஞ்செய் ரெட்டி, கிருஷ்ணன் மோகன் ரெட்டி ஆகியோரை புலனாய்வுக் குழு கைது செய்தது.
இவர்கள் இருவருமே ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; இவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. இதன் அடிப்படையில், அடுத்து ஜெகனை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த ஜெகன், 'மத்திய பா.ஜ., அரசை நம்பியிருந்தேன். அவர்களும் என்னை கைவிட்டு விடுவர் போலிருக்கிறது. சந்திரபாபு நாயுடுவுக்கு என் மீது ஏன் இந்த கொலை வெறி...?' என, புலம்புகிறார்.