PUBLISHED ON : ஜன 04, 2026 02:23 AM

'அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளனர், காங்கிரஸ் மேலிட தலைவர்கள்.
தொடர்ச்சியாக, மூன்று லோக்சபா தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது, காங்கிரஸ். தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே, காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
இதனால், காங்கிரசில் இருந்த பல தலைவர்கள், பா.ஜ., உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். இன்னும் சிலர், காங்கிரசில் இருந்து கொண்டே, கட்சியின் மேலிட தலைவர்களை விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி.,யான சசி தரூர், இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் மீது, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், அவரது விமர்சனம் தொடர்கிறது.
தற்போது இந்த பட்டியலில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கும் சேர்ந்துள்ளார். சமீபத்தில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய இவர், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை புகழ்ந்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையிலேயே, அவர் இப்படி பேசியது, பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
'காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம், துணை நின்றவர்களில் திக்விஜய் சிங்கும் ஒருவர். அவரே இப்போது தடம் மாறுகிறார் என்றால், மற்றவர்களை பற்றி என்ன சொல்வது...' என, புலம்புகின்றனர் கட்சி நிர்வாகிகள்.

