PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

'இதுவரை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது; திடீரென குண்டை துாக்கி போடுகின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார்.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்தை விட, பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும், கூட்டணி தர்மத்தை பின்பற்றிய பா.ஜ., தலைவர்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் அமர்த்தினர்.
இந்த முறை அப்படி நடந்து விடக்கூடாது என்பதில், பீஹார் பா.ஜ., தலைவர்கள் உறுதியாக உள்ளனர். 'நிதிஷ் குமாருக்கு, 74 வயதாகி விட்டது. ஞாபக மறதியாலும் அவதிப்படுகிறார். எனவே, இந்த தேர்தலில் பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர் தான் முதல்வராக வேண்டும்...' என, அவர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கு ஏற்ப, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, சமீபத்தில் அளித்த பேட்டி, நிதிஷ் குமாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
'நிதிஷ் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நிதிஷை முதல்வராக்குவது என் கையில் இல்லை. தேர்தலுக்கு பின், அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்து பேசி, இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்...' என்றார்.
இதனால் கலக்கம் அடைந்துள்ள நிதிஷ் குமார், 'தேர்தலில் வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி கிடைக்குமா...?' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார்.