PUBLISHED ON : செப் 17, 2026 01:02 AM

'பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நடக்கிறதா அல்லது ராஜஸ்தானில் நடக்கிறதா என தெரியவில்லை...' என, நகைச்சுவையுடன் கூறுகின்றனர், பஞ்சாப் மாநில மக்கள்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ.,வும், காங்கிரசும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
பா.ஜ.,வுக்கான தேர்தல் பொறுப்பாளராக, பா.ஜ., ராஜஸ்தான் முன்னாள் தலைவர் சதீஷ் புனியாவும்; காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக, காங்., ராஜஸ்தான் முன்னாள் தலைவர் சச்சின் பைலட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருமே, தேர்தல் வேலைகளை கண்காணிப்பதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தங்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்து வந்துள்ளனர். இதனால், பஞ்சாபில் எங்கு பார்த்தாலும், ராஜஸ்தான் அரசியல்வாதிகள் தான் கண்ணில் படுகின்றனர்.
சில நேரங்களில், பஞ்சாபில் இருக்கிறோமா அல்லது ராஜஸ்தானில் இருக்கிறோமா என்ற சந்தேகம், அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்படுகிறது. இது போதாது என்று, பஞ்சாப் கவர்னராக உள்ள குலாப் சந்த் கட்டாரியாவும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான்.
'தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன; அதற்குள், நம் மாநிலம் முழுமையாக ராஜஸ்தானாக மாறி விடும் போலிருக்கிறதே...' என, பஞ்சாப் மக்கள் கிண்டல் அடிக்கின்றனர்.
