
'நம் தலைவர், கடைசியில் நினைத்ததை சாதித்து விடுவார் போலிருக்கிறதே...' என, கர்நாடக துணைமுதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் குறித்து, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023ல் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும், முதல்வர் பதவியை பிடிப்பதில் சித்தராமையா, சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது.
மேலிட தலைவர்கள்தலையிட்டதன் அடிப்படையில், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்றனர். ஆயினும், 'சித்தராமையா முதல் இரண்டரை ஆண்டுகள் மட்டும் தான் முதல்வராக இருப்பார்; அதன்பின், எங்கள் தலைவர் அந்த பதவிக்கு வந்து விடுவார்...' என, சிவகுமார் விசுவாசிகள் நம்பிக்கையுடன் கூறி வந்தனர்.
இப்போது, அவர்களது நம்பிக்கை பலித்து விடும் போலிருக்கிறது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கில், சித்தராமையா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, 'தார்மீக அடிப்படையில்சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்...' என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
'எப்போது வேண்டுமானாலும், சித்தராமையா ராஜினாமா செய்யலாம்' என்ற பேச்சு அடிபடுகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள சிவகுமார் ஆதரவாளர்கள், 'பழம் நழுவி பாலில் விழப்போகிறது...' என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.