PUBLISHED ON : நவ 27, 2025 12:00 AM

'அஸ்திவாரமே ஆட்டம் காணும் போல் தெரிகிறதே...' என, மத்திய பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவின் ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.
ம.பி.,யில், 2023 இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பா.ஜ., மூத்த தலைவரான சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பதிலாக, புதுமுகமான மோகன் யாதவ் முதல்வராக பதவியேற்றார்.
புதிய அரசில், சிவ்ராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் இருந்த பலர் ஓரம் கட்டப்பட்டனர்; புதிய வர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால், கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
மோகன் யாதவ் தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
'எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும். இப்போது அமைச்சரவையில் உள்ளவர்களை கழற்றி விட்டு, எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், உங்களுக்கு நல்லது...' என, மோகன் யாதவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளனர்.
'எங்களை அமைச்சராக்கா விட்டால், மோகன் யாதவுக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். கட்சி மேலிடத்திடமும் எங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டோம். மோகன் யாதவ், முதல்வராக தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது அவரது கைகளில் தான் உள்ளது...' என்கின்றனர், ம.பி.,யில் உள்ள பா.ஜ., மூத்த தலைவர்கள்.

