PUBLISHED ON : ஜன 31, 2025 12:00 AM

'அரசியல்வாதிகள் இப்படி கோவில் கோவிலாக படையெடுத்தால், கோவிலில் உள்ள தெய்வங்களுக்கே குழப்பம் வந்து விடுமே...' என, கிண்டல் அடிக்கின்றனர், கர்நாடக மக்கள்.
இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியைப் பறித்து, தான் அமர்வதற்காக, துணை முதல்வர் சிவகுமார் நீண்ட நாட்களாகவே போராடி வருகிறார்.
இதற்கு பதிலடியாக, சிவகுமாரிடம் இருந்து மாநில காங்., தலைவர் பதவியைப் பறித்து, தன் ஆதரவாளரிடம் கொடுக்க, சித்தராமையாவும் முயற்சித்து வருகிறார். இரண்டு பதவிகளுக்குமே புதியவர்கள் நியமிக்கப்படலாம் என, டில்லி காங்கிரஸ் மேலிடத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதனால், இருக்கும் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கும், புதிதாக பதவியை பெறுவதற்கும் கர்நாடகாவில் உள்ள காங்., தலைவர்கள் கோவில்களுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
துணை முதல்வர் சிவகுமார், சமீபத்தில் பெலகாவியில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்றார். மூத்த அமைச்சரான சதீஷ் ஜார்கிஹோளி, சிகந்துார் ஜவுடேஸ்வரி அம்மன் கோவில் படிக்கட்டுகளில் உருண்டு புரண்டார். மற்றொரு அமைச்சரான முனியப்பா, பதவிக்காக கபாலீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேக பூஜையில் ஈடுபட்டார்.
இதைப் பார்த்த கர்நாடக மக்கள், 'ஒரே நேரத்தில் இத்தனை பேரும் பதவிக்காக வேண்டினால், சாமி, யாருடைய வேண்டுதலைத்தான் நிறைவேற்றும்...' என, சிரிக்கின்றனர்.

