PUBLISHED ON : செப் 20, 2024 12:00 AM

'அவரும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுமையாக இருப்பார்...' என, ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான சச்சின் பைலட் குறித்து பரிவுடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
சச்சின் பைலட்,காங்கிரஸ் மூத்த தலைவரான, மறைந்த ராஜேஸ் பைலட்டின் மகன்.'எப்படியாவது ராஜஸ்தான்முதல்வராகி விட வேண்டும்...' என்பது தான் இவரது லட்சியம்.ஆனால், பழுத்தஅரசியல்வாதியான, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், இவருக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, கெலாட்டை அப்புறப்படுத்தி விட்டு, சச்சின் பைலட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க, காங்., மேலிடம் திட்டமிட்டது; கெலாட் உடும்புப் பிடியாக இருந்து, அந்த முயற்சியை முறியடித்து விட்டார். ஆயினும், தேர்தலில் காங்., தோல்வியடைந்தது.
இதனால் விரக்தி அடைந்த சச்சின் பைலட்,பட்டும் படாமலும் அரசியல் செய்து வருகிறார்.சமீபத்தில் இவரது, 47வது பிறந்த நாளை, அவரது ஆதரவாளர்கள் வித்தியாசமாகக் கொண்டாடினர்.
ஜெய்ப்பூரில் உள்ள கோசாலையில் நுாற்றுக்கணக்கான பசுக்களுக்கு பூஜை செய்து வழிபட்டதுடன், அவற்றுக்கு ஏராளமான தீவனங்களையும் வாங்கிக் கொடுத்தனர்.
இது பற்றி கேள்வி எழுப்பியவர்களிடம், 'பசுக்களை வழிபட்டால், அரசியல் வாழ்க்கையில்வெளிச்சம் கிடைக்கும் என, எங்கள் தலைவர் நினைக்கிறார். அந்த நல்ல காலம் பிறக்குமா என பார்ப்போம்...' என்கின்றனர், சச்சின் பைலட் ஆதரவாளர்கள்.