PUBLISHED ON : ஜன 20, 2026 02:14 AM

'நடக்கும் சம்பவங்களை பார்த்தால், மிகவும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது...' என்கின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மற்ற மாநிலங்களை போலவே, தெலுங்கானாவிலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராத தொகையை செலுத்தும்படி, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, மொபைல் போன் வாயிலாக, 'சம்மன்' அனுப்பப்படுகிறது. போக்குவரத்து போலீசார், இவர்களிடம் நேரில் சென்று அபராதத்தை வசூலிக்க முடியாது. 'ஆன்லைன்' வாயிலாகவே அபராத தொகையை இவர்கள் செலுத்த வேண்டும்.
இதனால், பெரும்பாலானோர், அபராத தொகையை செலுத்தாமல் பல மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளனர். இந்த விவகாரம், முதல்வர் ரேவந்த் ரெட்டி கவனத்துக்கு சென்றது. அவர், அபராதத்தை வசூலிப்பதற்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, குறிப்பிட்ட தேதிக்குள் அபராத தொகையை முழுமையாக செலுத்துவோருக்கு, அபராதத்தில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என, அறிவித்தார்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வாகன ஓட்டிகளில் பலர், 'இன்னும் சில நாட்கள் அபராதத்தை செலுத்தாமல் இருந்தால், அபராத தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது' என கருதி, இழுத்தடித்து வருகின்றனர்.
அதிகாரிகளோ, 'முதல்வர் தவறான முடிவை எடுத்து விட்டாரே...' என, புலம்புகின்றனர்.

