PUBLISHED ON : ஜன 01, 2024 12:00 AM

'அபார வெற்றிக்குப் பின் இவ்வளவு கடுமையான உழைப்பு உள்ளதா...' என, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், மத்திய பிரதேச மாநில, பா.ஜ., தொண்டர்கள்.
இங்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது; பா.ஜ., வின் மோகன் யாதவ் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில், இங்கு காங்கிரஸ் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், காங்கிரசில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியா, தன் ஆதரவாளர்களுடன் வெளியேறி, பா.ஜ.,வுக்கு தாவியதால், காங்., ஆட்சி கவிழ்ந்தது.
இந்த முறை, தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவை, மத்திய பிரதேசத்துக்கு அனுப்பி வைத்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
கடந்த தேர்தலில், பா.ஜ., மிக குறைவாக ஓட்டு வாங்கிய, 89 தொகுதிகளிலும், 'பூத்' வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்த பூபேந்திர யாதவ், அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஒவ்வொரு பூத்திலும் உள்ள வாக்காளர்களை தனித்தனியாக சந்தித்து, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வலியுறுத்தும் படி கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.
பூபேந்திர யாதவின் இந்த தந்திரம் பலித்ததை அடுத்து, இந்த, 89 தொகுதிகளில், 66ல், பா.ஜ., அபார வெற்றி பெற்றது. 'கட்சியின் வெற்றிக்கு, பூபேந்திர யாதவின் இந்த தந்திரம் தான், முக்கிய பங்காற்றியது...' என பாராட்டுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.