PUBLISHED ON : செப் 08, 2011 12:00 AM
அறிவியல் ஆயிரம்
கால்நடை மருத்துவ ஆண்டு
சர்வதேச வேதியியல் ஆண்டு, சர்வதேச காடுகள் ஆண்டு மட்டுமின்றி, இந்த ஆண்டு சர்வதேச கால்நடை மருத்துவ ஆண்டாகவும் கொண்டாடப்படுகிறது.
உலகின் முதன்முதலாக கால்நடை மருத்துவப் பள்ளி, 1769ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லயன் என்னும் ஊரில், கால்நடை மருத்துவர் கிளாடு போக்கலைட் என்பவரால் துவங்கப் பட்டது. இதன் 250வது ஆண்டினைக் கொண்டாடும் வகையில், 2011ம் ஆண்டு கால்நடை மருத்துவ ஆண்டாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 'கால்நடையே ஆரோக்கியம், கால்நடையே உணவு, கால்நடையே நாம் வாழும் உலகம்' என்னும் ஐரோப்பிய சிந்தனையை கருத்தாகக் கொண்டு, கால்நடை மருத்துவ ஆண்டு கொண்டாடப்படுகிறது. ஒப்பீட்டு உயிரியல் நோய் கோட்பாடு என்னும் பயோ பேத்தாலஜி துறை உருவாக்கப்பட்டதையும், கால்நடை மருத்துவ ஆண்டு நினைவு கூர்கிறது.
தகவல் சுரங்கம்
ராமசேரி இட்லி
உளுந்தம் பருப்பு விலை உயர்வால், எளிய மலிவான உணவான இட்லி இன்று 'காஸ்ட்லி' ஆகிவிட்டது. தென் மாநிலங்களில் காஞ்சிபுரம் இட்லி பாரம்பரிய இட்லி வகையாகும். கோவை, ஈரோடு மாவட்டத்தில் ஆமணக்கு விதை சேர்த்து பெரியதாக செய்யப்படும் இட்லி, நவீன காலத்தில் 'குஷ்பூ இட்லி' என பெயர் பெற்றுள்ளது. கேரளாவில் ராமசேரி இட்லி பிரபலமானதாகும். இந்த இட்லி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் என்பது இதன் தனித்தன்மையாகும். பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் ராமசேரி கிராமம் உள்ளது. இந்த ஊரின் முக்கிய தொழிலாக இட்லி வியாபாரம் உள்ளது. மண் பாத்திரத்தில் தான் இன்னும் இட்லி வார்க்கப்படுகிறது. இந்த ஊரின் இட்லிகள் ஒரு வாரத்திற்கு கெடாத சிறப்புத் தன்மையால், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இட்லியோடு 'சைடிஷ்' ஆக தரப்படும் பொடிக்கும் ராமசேரி பிரபலமானதாகும்.