PUBLISHED ON : ஆக 04, 2011 12:00 AM
நலிந்து வரும் தொழில்கள்
ஆன்லைன் வர்த்தகத்தால், தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும், விற்பனையும் அதிகமாக உள்ளது. டிசைன்களை வரைந்து பொற்கொல்லர்களிடம் தரும் காலம் போய் விட்டது. கடைகளில் டிசைன் களைத் தேர்ந்தெடுக்கும் காலம் வந்து விட்டது. இதனால் தமிழகத்தில் நலிந்து வரும் தொழில்களில் ஒன்றாக, பொற்கொல்லர் தொழில் மாறி விட்டது. தற்போது நகைத் தொழிலில், மெஷின்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் சேதாரம் குறைவாக உள்ளது. பொற்கொல்லர் கைகளினால் செய்யும் நகைகளில் சேதாரம் அதிகமாக இருப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. மெஷின்களில் நகைகளைச் செய்யும் போது, குறைந்த எடையிலேயே பெரிய அளவுள்ள டிசைன்களைச் செய்ய முடிகிறது. கட்டட தொழில்களைப் போன்று, நகைத் தொழிலிலும் வட மாநிலங்களில் இருந்து கூலிக்கு அதிக எண்ணிக்கையில் அழைத்து வரப் படுகின்றனர். இவர்கள், தமிழக பொற்கொல்லர் களுக்கு சவாலாக உள்ளனர்.
தகவல் சுரங்கம்
சமூகப் பொறுப்புணர்வு விருது
சமூகம் குறித்த பொறுப்புணர்வு இன்மையால் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், நில அபகரிப்பு குற்றச்சாட்டு போன்றவற்றில் நன்கு படித்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில், சமூகப் பொறியியல் என்னும் துறை உருவாகி உள்ளது. மாணவப் பருவத்திலேயே சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர்களாக மாற்றி விட்டால், அவர்கள் ஆட்சியாளர்களாகவும், அதிகாரி களாகவும் வரும்போது, பொறுப்புடன் திகழ்வர் என்பதே இதன் அடிப்படை அம்சமாகும். வெளிநாடுகளில் கல்லூரிகளில் பட்டம் பெறுவதற்கு, ராணுவப் பயிற்சி கட்டாயம் என்பது போல், 'மக்கள் சமூகங்கங்களில்' தங்கி பயிற்சி பெற்றால் தான் பட்டங்கள் பெற இயலும் என்பதே சமூகப்பொறியியல் ஆகும். இது இந்தியாவில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகம், மத்தியப்பிரதேசத்தில் சித்ரகூட் கிராமியப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் செயல்படுத்தப் படுகிறது. தமிழக அரசும் சமூகப் பொறியியல், சமூகப் பொறுப்புணர்வு குறித்த விழிப்புணர்வை வளர்க்கும் வகையில், சமூகப் பொறுப்புணர்வு விருதை வழங்கி வருகிறது.