போட்டி தேர்வுக்கான தன்னம்பிக்கையை கொடுக்கிறது 'பட்டம்'
போட்டி தேர்வுக்கான தன்னம்பிக்கையை கொடுக்கிறது 'பட்டம்'
PUBLISHED ON : ஏப் 23, 2026 12:16 AM

'தினமலர்' நாளிதழ் தனது 75வது ஆண்டை கொண்டாடி வரும் இந்த வேளையில், தினமலரின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழும் 10வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல், எங்கள் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த இதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், மாணவர்களின் பொது அறிவு திறனை வளர்ப்பதோடு, தமிழ் வாசிப்பு திறன், மொழி புலமை மற்றும் சொல்வளத்தையும் மேம்படுத்துவது. இது, எங்கள் மாணவர்களுக்கு மட்டும் அல்லாது, ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
கணிதத்தில் புதிய எண்ணங்களை ஊக்குவிப்பதுடன், மெட்ராஸ் ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி அவர்களின் வழிகாட்டுதலுடன் வெளிவரும் 'மாற்றி யோசி', சதுரங்க விளையாட்டு நுட்பங்களை கற்றுத் தரும் 'பலகைப்போர்', 'குவாண்டம் அறிவியல்' போன்ற பகுதிகள், உலகளவில் வளர்ந்து வரும் அனைத்து துறைகளிலும், இன்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்களை தொகுத்து, ஒரே இதழாக, தகவல் களஞ்சியமாக, அறிவுப்பெட்டகமாக தினமலர்-பட்டம் வழங்குகிறது. இதனால், மாணவர்களுக்கு, குறைந்த நேரத்தில், அதிக அறிவு கிடைக்கிறது.
பல மாணவர்கள், எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த மேற்படிப்பை தொடர வேண்டும், தங்களின் அடிப்படை அறிவு எந்த துறையில் சிறந்து விளங்குகிறது என்பதை கண்டறிய பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு, தினமலர்-பட்டம் இதழ் ஒரு வலுவான வழிகாட்டியாக செயல்படுகிறது என்பதை கடந்த பல ஆண்டுகளில் நான் நேரடியாக கண்டறிந்து உள்ளேன்.
யூ.பி.எஸ்.சி., போன்ற போட்டி தேர்வுகளை கடினமானவை என கருதி மாணவர்கள் அஞ்சிய காலம் மாறி, தினமலர்-பட்டம் வழங்கிய தன்னம்பிக்கை காரணமாக, இன்று எங்கள் பள்ளியின் பல மாணவர்கள் யூ.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., போன்ற அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் உயர்ந்த சூழல் உருவாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற 'பட்டம் வினாடி-வினா' போட்டியில், இரண்டாம் இடத்தை பெற்ற எங்கள் பள்ளி மாணவி ரேணுகா, 'நிச்சயமாக நான் யூ.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருவேன். இந்த நம்பிக்கையை பட்டம் இதழ் எனக்கு தந்துள்ளது' என்று என்னிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தினமலர்-பட்டம் இதழை அறிமுகப்படுத்தினால், தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறை, அறிவாற்றல் மிக்க, சிந்தனை ஆழமுள்ள தலைமுறையாக உருவாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தினமலர் நாளிதழுக்கு பவள விழா ஆண்டு வாழ்த்துக்களையும், தினமலர்-பட்டம் இதழுக்கு 10 ஆண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றியுடன்,
ஆர். சீனிவாசன்
முதுநிலை முதல்வர், ஸ்ரீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர், சென்னை
