/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
மக்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி 'தினமலர்'
/
மக்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி 'தினமலர்'
PUBLISHED ON : நவ 03, 2025 12:00 AM

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முழுநேர பிரசாரக்காக, என் இளம் வயதில் வீட்டைவிட்டு வந்த சமயத்தில், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் அவர்களை அவரது இல்லத்தில் சந்திப்பது வழக்கம். அப்போது அவரும், அவரது மனைவி கிருஷ்ணம்மாள் அவர்களும் என்னை போன்ற சங்கத்தின் பிரசாரகர்களை, தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல கவனித்து கொள்வர். தலைமுறைகள் கடந்தும் அந்த பிணைப்பு தொடர்கிறது.
'தினமலர்' நிர்வாகத்திற்கு நான்காம் தலைமுறையினர் வந்துவிட்ட பின்னரும், டி.வி.ராமசுப்பைய்யர் எந்த நோக்கில் தினமலரை துவக்கினாரோ அதே நோக்கத்துடன் தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் இதழாக தினமலர் உள்ளது.
'தினமலர்' மக்களின் குரலாக ஒலிக்கிறது. ஒரு பிரச்னையில் மக்கள் தங்கள் மனதில் என்ன நினைக்கின்றனரோ அதையே செய்தியாக வெளியிடுவது தனிச்சிறப்பு, அதனால் தான், மக்களின் அமோக வரவேற்பை தினமலர் பெற்றுள்ளது. அந்த செய்திகளின் வாயிலாக ஆயிரக்கணக்கான பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைத்துள்ளது.
நாட்டை அரித்துக்கொண்டிருக்கும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற தினமலரின் கோஷம் தமிழகம் எங்கும் பல நேர்மையாளர்களின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்கள் மக்கள் நலனோடு செய்யும் பணிகளுக்கு ஆதரவு அளித்து வருவதும் தினமலரின் தனிச்சிறப்பாகும்.
தேசியத்திற்காகவும், இந்த மண்ணின் பண்பாடு, ஆன்மிகத்திற்காகவும் தினமலரின் பங்களிப்பு அளப்பறியது. இதற்காக 'தினமலர்' எதிர்கொண்ட நெருக்கடிகள், தாக்குதல்கள், வழக்குகளும் ஏராளம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் நிலைப்பாட்டில் இம்மியளவும் மாறாமல் பயணித்து வருகிறது. பாரத நாட்டின் கலாசாரம் மென்மேலும் செழித்து ஓங்க, இடைவிடாது 'தினமலர்' பணியாற்றி வருகிறது.
கார்கில் யுத்தம், ஆப்பரேசன் சிந்துார் உள்ளிட்ட எதிரி நாடுகளுடன் போர் நடக்கும் சமயங்களில், மக்கள் மத்தியில் தேச பக்தியை தட்டியெழுப்பி, நம் ராணுவத்துடன் தோளோடு தோள் கொடுக்கச் செய்யும் தினமலரின் பணி மகத்தானது.அயோத்தியில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைத் தொடர்ந்து ஸ்ரீ ராமபிரானுக்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு துவங்கி, பிராண பிரதிஷ்டை வரை மகத்தான சிறப்பு பக்கங்களை ஆர்ட் பேப்பரில் வெளியிட்டதை, இன்றும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
தினமலரின் மனம் அன்பும், சமூக அக்கறையும் நிறைந்தது. அதன் வெளிப்படாக, ஏழை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்று எவ்வாறு பயனடைகின்றனர், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த தாய்மார்கள் எவ்வாறு பலவிதமான முயற்சிகள் செய்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் உயர்நிலையை அடைந்துள்ளனர். என்பது போன்ற செய்திகளை வெளியிடுகிறது. அவை எனக்கு பெரிதும் ஊக்கம் அளிக்கும்.
தினமலரின் இன்றைய வழிகாட்டிகளாக விளங்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். தமிழக மக்களின் மனதின் கண்ணாடியாகவும். தமிழகத்தில் தர்மத்தின் குரலாகவும் ஒலிக்கும் தினமலரின் மகத்தான பணி தொடர என் இஷ்ட தெய்வமான சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானையும், பழனியாண்டவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன்
வாழ்க பாரதம்! வாழ்க தெய்வீகம்! வெல்க தமிழ்!
வி.சண்முகநாதன்,
முன்னாள் கவர்னர்,
மேகாலயா மற்றும் அருணாசல பிரதேசம்.

