/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தேசிய சிந்தனையுள்ள நாளிதழ் 'தினமலர்'
/
தேசிய சிந்தனையுள்ள நாளிதழ் 'தினமலர்'
PUBLISHED ON : பிப் 10, 2026 03:18 AM

'தினமலர்' நாளிதழ், முதலில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் துவக்கப்பட்டது. பின், திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாபெரும் வளர்ச்சி கண்டு, இன்று 12 பதிப்புகளாக வெளியாகிறது. தமிழகத்தின் மூத்த, முன்னணி நாளிதழ்களில் ஒன்றாகவும், தமிழக மக்கள் விரும்பி படிக்கும் முக்கிய நாளிதழ்களில் ஒன்றாகவும், மக்களின் ஆதரவு பெற்று, வெற்றிகரமான நாளிதழாக திகழ்கிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவங்கிய காலத்தில், அவருக்கும், அவர் கண்ட இயக்கத்திற்கும் முதுகெலும்பாகவும், பக்க பலமாகவும் துணை நின்று, எம்.ஜி.ஆரின் புகழுக்கும், அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கும் தினமலர் உறுதுணையாக நின்றது. அதனால், தினமலரின் வாசகர் வட்டமும் விரிவடைந்தது.
தினமலர் ஒரு மாநில மொழி நாளிதழாக இருந்தாலும், அது தேசிய சிந்தனையுடைய இதழ் என்பதற்கு சான்றாக, தொடர்ந்து தேசிய கட்சிகளுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் தந்து வருகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் துணை நின்ற, துணை நிற்கிற நாளிதழாகவும் திகழ்கிறது. அதேசமயம், எல்லா அரசியல் கட்சிகளின் செய்திகளையும் பிரசுரிப்பது; மத்திய, மாநில அரசுகள் செய்யும் மக்கள் நலப்பணிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது என்ற வகையில் மட்டுமல்லாது; மத்திய, மாநில அரசுகளின் குறைகளையும் தவறுகளையும் துணிச்சலுடன் சுட்டிக் காட்டிடும் நாளிதழாகவும் தினமலர் திகழ்கிறது. பவள விழா காணும் தினமலரின் வளர்ச்சிக்கு துணை நின்ற ஆசிரியர்கள், நிருபர்கள், முகவர்கள், பணியாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பாராட்டும், வாழ்த்தும்.
நடுநிலை காத்து, தமிழ் வளர்த்து, தமிழர் நலன் காத்து, தினமலர் தொடர்ந்து சிறப்புடன் சமூக பணியாற்றிட உளமாற வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
சு.திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்

