PUBLISHED ON : மார் 28, 2026 12:00 AM

தமிழகத்தில், நகர் மட்டுமின்றி, கிராமங்களை கொண்ட ஊரக பகுதிகளில் வாழும் மக்களின் குரலாக 'தினமலர்' நாளிதழ் விளங்குகிறது. செய்திகளை நம்பகத்தன்மையுடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை, தற்போது வரை முழுமையாக நிறைவேற்றி வந்திருக்கிறது.
செய்தி துறையில், தினமலரின் 75 ஆண்டு கால சிறப்பான பயணத்தை; உண்மை, நேர்மை, துல்லியம், முழுமையான தகவலை சுருக்கமான முறையில் தருவது, எளிதில் விளங்க வைக்கும் தெளிவான கட்டமைப்பு ஆகியவற்றால் அடையாளப்படுத்தலாம். இந்த அடையாளங்கள் வாயிலாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது 'தினமலர்'.
அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், மக்களிடம் சரியாக சென்றடைவதற்கான இணைப்பு பாலமாக தினமலர் செயல்பட்டு வருகிறது என்பதில் எள்ளளவும் மாற்று கருத்து இருக்காது. நடைமுறை சிக்கல்களால் தீர்வு காணப்பாடாத, மக்களின் நீண்டகால கோரிக்கைகள், பிரச்னைகள், எதிர்பார்ப்புகளை அதிகாரிகளிடமும், அரசிடமும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜனநாயகத்தில், செய்தித்துறை நான்காவது துாண் என்பதை தமது செயல்பாட்டின் மூலம் அடையாளப்படுத்தி வருகிறது.
தினமலர், பொதுநலனுக்காக பல முக்கிய சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அவற்றால், சமூக மாற்றமும், சமுதாய முன்னேற்றமும் நடந்து வருகின்றன. சமுதாயத்தில், சமூக பொறுப்புணர்வு உள்ள ஓர் அங்கமாக, தன் செயல்பாடுகள் மூலம், தினமலர் தன்னை நிரூபித்து வருகிறது.
தினமலர் நாளிதழின் நிர்வாகம், ஊழியர்கள் வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய உழைப்பே இந்த இமாலய வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது என்றால் மிகையில்லை.
தினமலர் நாளிதழுக்கு 75வது ஆண்டு பவள விழா என்பது, செய்தி துறையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் எனலாம். இந்த சிறப்பான தருணத்தில், தினமலரின் சேவை மேலும் பல ஆண்டுகள் சிறந்து விளங்க வேண்டும். உண்மை செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் வாயிலாக, சமூக முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
-இ.பெரியசாமி
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்
