/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
சமத்துவத்தை வலியுறுத்தும் 'தினமலர்' நாளிதழ்
/
சமத்துவத்தை வலியுறுத்தும் 'தினமலர்' நாளிதழ்
PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM

'தினமலர்' நாளிதழ் தன், 75ம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன் சிறப்புகள் பற்றியும், வரலாறு பற்றியும் வாசகர்களுக்கு தனியாக சொல்ல வேண்டியதில்லை. ஆனால், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் 'தினமலர்' எப்படி கடைப்பிடிக்கிறது என்பதை சொல்ல வேண்டும். 'தினமலர்' குடும்பத்தார் அனைவரும், என்றும் எப்போதும் ஹிந்து தர்ம, ஆன்மிக மற்றும் தேசிய இயக்கங்களுக்கு, குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவு நல்கி வருபவர்கள்.
ஆர்.எஸ்.எஸ்., முழு நேர ஊழியர்கள் பலரை, தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் அவர்களின் மனைவி கிருஷ்ணம்மாள் அன்னமிட்டு வளர்த்திருக்கிறார். திராவிடர் கழகங்கள், ஹிந்து சமய கடவுள்களை இழிவுபடுத்திய போதும், பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் செய்த போதும், தினமலரை பிராமண பத்திரிகை என ஜாதி முத்திரை குத்தி புறக்கணிக்க முயற்சித்தபோதும், அத்தகைய எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல், ஊடக தர்மத்தின்படி செய்திகளை வெளியிட்டு சாதனை படைத்தது 'தினமலர்' நாளிதழ்.
அந்த குடும்பத்தார் எப்போதும் தீண்டாமை இழிவுகள் மற்றும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இருப்பவர்கள். மத நல்லிணக்கத்துக்கு செயல்படுபவர்கள். அதே நேரம், ஹிந்து தர்மத்தின் மேன்மைகளையும், சிறப்புகளையும்; தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பாதுகாப்பவர்கள்.
அரசாங்கம் மற்றும் ஆளுங்கட்சி செய்கின்ற நல்ல விஷயங்களை பாராட்டுவதோடு, மக்களின் குறைகளையும் அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதில், 'தினமலர்' முக்கிய பங்காற்றுகிறது. ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் அங்குசமாகவும், லஞ்ச ஊழல் மற்றும் நிர்வாகத் தவறுகளை அம்பலப்படுத்தும் போராளியாகவும் 'தினமலர்' செயல்பட்டு வருகிறது.
நெல்லை, குமரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில், ஹிந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற 'தாய் சமயம் திரும்பும் திருவிழா' மூலம் பல்லாயிரக்கணக்கானோர் தாய் மதம் திரும்பினர். இது சம்பந்தமான செய்திகளை வெளியிட்டு, மோசடி மதமாற்றங்களை தடுக்கவும், தாய் சமயம் திரும்புவதை ஊக்குவிக்கவும் 'தினமலர்' நாளிதழ் துணையாக இருந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள பாடல் பெற்ற மற்றும் மங்களா சாசனம் செய்யப்பட்ட திருக்கோவில்கள் குறித்து முழு விபரங்களை, 'தினமலர்' தொகுத்து வெளியிட்டுள்ளது. இது, பக்தர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
திருக்கோவில்களின் சொத்துக்களை பாதுகாப்பது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நிகழ்வுகளை, ஹிந்து மக்கள் கட்சி முன்னெடுக்கும் போது, அதற்கு பேராதரவு கொடுத்தது. தமிழகத்தில் ஹிந்து சமய ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் 'தினமலர்' பெரும் பங்காற்றுகிறது.
தமிழகத்தில் தேசியம், ஆன்மிகம் வளரவும், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவும், தேச பக்தர்கள் செய்யும் முயற்சி அனைத்தையும் 'தினமலர்' நாளிதழ் செய்தியாக வெளியிட்டு வருகிறது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் குடும்பத்தார் அனைவரும், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நுாறாயிரம் ஆண்டு வாழ்ந்து, சாதனை படைத்திட பாரதத்தாயின் திருவருளை வேண்டுகிறோம்! இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்!
இப்படிக்கு,
என்றும் ஹிந்து தேசியப்பணியில்,
அர்ஜுன் சம்பத்,
நிறுவன தலைவர்,
ஹிந்து மக்கள் கட்சி, தமிழகம்