புதுமைகளை புகுத்துவதில் இணையற்றது 'தினமலர்' நாளிதழ்
புதுமைகளை புகுத்துவதில் இணையற்றது 'தினமலர்' நாளிதழ்
PUBLISHED ON : மே 11, 2026 01:01 AM

உண்மையின் உரை கல்லாக விளங்கும் ஒப்பற்ற தினமலர் நாளிதழுடன் எனக்கு 50 ஆண்டு கால பழக்கம் தொடர்கிறது. அதை நினைத்து பார்க்கிறேன். முதன் முதலில் எனக்கு மன்னார்குடியில் அதை அறிமுகப்படுத்தியவர், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு என்ற பெருமகனார். அன்றிலிருந்து இன்று வரை அந்த பத்திரிகையுடன் பயணித்து வருகிறேன்.
நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நாட்டத்திற்காக ஆரம்பத்தில் அதை தொட்ட எனக்கு நாளாக நாளாக செய்தி சொல்லும் அதன் அழகால் ஈர்க்கப்பட்டு கல்லூரி பருவத்தில் 'வெண்மதி' என்ற கையெழுத்து பிரதியை தொடங்கி நடத்த துணிச்சலையும் எழுத்தாற்றலையும் எப்படி எழுத வேண்டும் என்கிற பாலபாடத்தையும் எனக்கு தினமலர் நாளிதழ் சொல்லி தந்தது.
தமிழ்நாடு அரசு மக்கள் தொடர்பு அலுவலர் பணியில் சேர்ந்த பின் பல நாளிதழ்களை படித்து, பிரித்து தொகுத்து வகைப்படுத்தி, செய்தி நறுக்குகளாக கலெக்டர் மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தொடர் பணிகளை செய்த போது அதிக எண்ணிக்கையில் செய்தி நறுக்குகளை தருவதில் 'தினமலர்' முதலிடம் வகிக்கும்.
இதற்கு காரணம் மக்கள் பிரச்னைகளை குறைகளை நலிந்தோரின் நலன்களை சமூக அவலங்களை அதிகம் பேசி சுட்டிக்காட்டுவது தினமலரே என்பதை புரிந்து கொண்டேன். அனைத்து நாளிதழ்களையும் தினமும் தவறாமல் மக்கள் தொடர்பு அலுவலர் கட்டாயம் படிக்க வேண்டும். அரசுக்கு சாதகமாக அல்லது பாதகமாக ஏதேனும் செய்திகள் வந்தால் அவற்றை சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு அனுப்ப வேண்டிய கடமை அப்பணிக்கு இருக்கிறது. அப்படி படிக்கும் போது பல பத்திரிகைகளின் தரமும், குணமும் அவற்றின் வீச்சும் நடையும், அமைப்பும், சொல்லும் திறனும் இனம் பிரித்து காட்டும்.
அதில் தினமலர் நாளிதழ் தனித்து ஒளிப்பிழம்பாய் சுடர் வீசும்.தலைப்பு செய்தியை படிக்க தூண்டும் வகையில் நறுக்கென்றும் சுருக்கென்றும் சுருங்க சொல்லி விளங்க வைக்கும் . சில நேரங்களில் மிரள வைக்கும் ஆற்றல் தினமலருக்கு இருப்பதை கண்டு ருசித்து ரசித்திருக்கிறேன். வியந்தும் இருக்கிறேன்.
தகவல் தரும் விதமும், கையாளும் சொற்களின் வீரியமும் காட்சிகளைநேரில் பார்ப்பது போன்ற வர்ணனைகளும் படிப்பவருக்கு அலாதி பிரியத்தை ஏற்படுத்தும்.
முதன் முதலில் 'டீக்கடை பெஞ்சு' என்ற புதி பகுதி உருவாக்கப்பட்ட போது மக்களையும் என்னையும் மிகவும் கவர்ந்த ஒன்று, அதிகார வர்க்கத்தை அலற வைத்தது. பெஞ்சில் ஏறியவர்களுக்கு குற்ற உணர்வையும், மேல் நடவடிக்கை எடுககப்படும் என்கிற அச்சத்தையும் இன்றும் தந்து வருகிறது. அந்த பயமே அதிகாரிகளிடம் ஒழுக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. சில நேரங்களில் 'டீக்கடை பெஞ்சு' மற்ற பக்கங்களை பின்னுக்கு தள்ளியதும் உண்டு.
டவுட் தனபாலு, பேச்சு பேட்டி அறிக்கை உள்நாட்டு வெளிநாட்டு செய்திகள், இது உங்கள் இடம்,படிக்கலாம் வாங்க என்ற புத்தக விமர்சன பகுதி, வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர், போன்ற இணைப்புகள் என பலதரப்பு வாசகர்களையும் அவரவர் இதயத்தை தொட்டு ஓட்ட வைத்த பெருஞ்சிறப்பு தினமலரை சாரும்.
என்னுடைய 'ஆகாயத்தின் அந்தப்புறம்' நூல் விமர்சனம், 'படிக்கலாம் வாங்க' பகுதியில் வெளி வந்ததால் படிப்பாளர்களிடமும், படைப்பாளர்களிடமும் நல்ல பெயரையும் வரவேற்பையும் பெற்று மிகவும் பிரபலமானது. இரண்டாவது நூலான 'வெட்கப்படும் நெற்கதிர்' நூல் வெளியீட்டு விழா புகைப்படங்களை, தினமலர் வெளியிட்டு பெருமைப்படுத்தியதை நன்றி உணர்வோடு நினைத்து பார்க்கிறேன்.
பணி ஓய்வுக்கு பின் 'வாக்காளர் சக்தி' என நான் நடத்திய பத்திரிகைக்கு ஆதாரமாக பல செய்திகளை தந்து அசத்தியது தினமலரே. அதையும் நினைத்து பார்க்கிறேன். அனைத்து வயதினரையும், அனைத்து தலைமுறையினரையும் சமூக வலை தளங்கள், ஊடகங்கள் தன் பக்கம் கவர்ந்திழுத்து கட்டி போட்டிருக்கும் தொழில்நுட்ப கால கட்டத்தில், பத்திரிகை தர்மத்தை கொஞ்சம் கூட சிதைக்காமல் மேம்படுத்தி காக்கின்ற நான்காம் தூண் பணியை பிரதான கடமையாக உயர்த்தி பிடிப்பதில் உன்னத பங்கு வகிப்பது 'தினமலர்' நாளிதழ் என்றால் அதுமிகை அல்ல.
பல தரப்பு வணிக போட்டி பொறாமைகளுக்கு இடையே அத்தனை நெருப்புகளையும் சமாளித்து புடம் பேட்ட தங்கமாக தன்னை 75 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் தன்னை முன்னணியில் நிலை நிறுத்தி வருகின்ற அறப்பணியை, தினமலர் செய்து வருகிறது.
அது பல நூற்றாண்டுகள் தொடர வேண்டும் தமிழன்னை மணி மகுடத்தில் மேலும் மேலும் புகழ் சேர்க்க வேண்டும் என உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் மனதார வாழ்த்துகி்ன்றனர். சமூக பொறுப்பும், மக்கள்மீது அக்கறையும் காலத்துக்கு ஏற்ப புதுமைகளை புகுத்துவதிலும் இணையறற தினமலரை நானும் பொதுமக்களுடன் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றேன்.
இப்படிக்கு
சக்திமான் அசோகன்
எழுத்தாளர் மற்றும் படைப்பாளர்
முன்னாள் இணை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புதுறை , தமிழ்நாடு அரசு
