/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
'தினமலர்' நல்லவர்களுக்கு பாதுகாப்பு
/
'தினமலர்' நல்லவர்களுக்கு பாதுகாப்பு
PUBLISHED ON : அக் 29, 2025 12:00 AM

நினைவு தெரிந்த நாளிலிருந்து தினமும் காலையில் என்னை உற்சாகப்படுத்துவது 'தினமலர்' நாளிதழ் தான். ஒரு செய்தித்தாளாக என் வாழ்க்கையில் நுழைந்து, இன்று என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது.
தினமலர் உண்மையின் உரைகல் என்பது உண்மைதான். அதையும் தாண்டி, அது  மக்கள் நலம் விரும்பும்  நாளிதழ் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
ஆயிரக்கணக்கில் விளம்பர வருவாய் வரக்கூடிய இடத்தைத் தியாகம் செய்து, நம் வீட்டுப் பெரியோர்களைப்போல் யாராவது நமக்கு அறிவுரை சொல்வாரா? தினமலர் சொல்லும்.
காலை ஆறு மணிக்கு முன்பும் மாலை ஆறு மணிக்குப் பின்பும் காரில் வெளியூர் பயணம்  வேண்டாம் என்று எந்தப் பத்திரிகையாவது சொல்லியிருக்கிறதா?
இருசக்கர வாகனங்கள் விபத்தில் மாட்டிக்கொண்டால் அதில் சிக்கிக் கொண்டவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்பதை அடைப்புக் குறிகளுக்குள் போடுவர்.  இதைவிட சக்திவாய்ந்த விழிப்புணர்வு பிரசாரம் இருக்கவே முடியாது.
நான் எழுதி, 'தினமலர்' ஆன்மிக மலரில் வெளிவந்த  'பச்சைப் புடவைக்காரி' தொடர் என் எழுத்துலக வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. நான் எழுத்தாளன் என்று அறியப்பட்டது, அந்த தொடர் வந்த பிறகுதான். அதற்கு வித்திட்ட மதுரைப் பதிப்பின் வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு அவர்களுக்கு நான் பட்ட நன்றிக் கடனைத் தீர்க்கவே முடியாது.
இன்றைய அரசியலும், சமுதாயமும் இருக்கும் நிலையை பார்க்கும் போது, 'தினமலர் போன்ற ஒரு நாளிதழ் நம்மிடையே இல்லாவிட்டால்...' என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.  தினமலர்  என்றென்றும் நம் சமுதாய அமைப்பின் பகுதியாக இருப்பதுதான் நல்லவர்களுக்கு பாதுகாப்பு.
நல்ல படைப்பாளிகளை தினமலர் உருவாக்கி வருவது ஊரறிந்த விஷயம். பல ஊடகங்கள் செய்கின்ற வேலைதான் அது. ஆனால் நல்ல எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்து செய்திகளைப் பொறுப்புடன் வெளியிட்டு அதன்மூலம்  நல்ல மனிதர்களை உருவாக்குவதில் தினமலரின் பங்கு மகத்தானது.
தற்போது 75வது ஆண்டை தொட்ட பின்னும் புதுக்கருக்கு அழியாத இளமையுடன் திகழ்கிறது தினமலர். அதன் உரிமையாளர்கள், ஊழியர்கள் என இந்த மகத்தான ஊடகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரும் நலமுற வாழவேண்டும் என்ற பிரார்த்தனையை, பச்சைப் புடவைக்காரியிடம் வைக்கிறேன்.
அன்புடன்,
வரலொட்டி ரெங்கசாமி
எழுத்தாளர், மதுரை

