PUBLISHED ON : மே 15, 2026 12:00 AM

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் அறிவுரையையும் மீறி 'தினமலர்' தொடங்கப்பட்டது என்பது, தமிழக இதழியல் வரலாற்றில், ஒரு முக்கியமான குறிப்பு. ஒரு நாளிதழை நடத்துவதில் உள்ள சவால்களை கருத்தில் வைத்து, ராஜாஜி அன்று எச்சரித்திருக்கலாம். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில், தமிழகத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய, பாரபட்சமற்ற மற்றும் நிதி தற்சார்பு கொண்ட ஒரு பெரும் ஊடக நிறுவனமாக தினமலர் உருவெடுத்துள்ளது. தனது கணிப்பு தவறாக நிரூபிக்கப்பட்டதை கண்டு, தொலைநோக்கு பார்வை கொண்ட ராஜாஜி, இன்று உயிருடன் இருந்திருந்தால், நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
நவீன காலத்தில், டிஜிட்டல் புரட்சிக்கு ஏற்ப, தன்னை வியக்கத்தக்க வகையில் தகவமைத்துக் கொண்டுள்ளது தினமலர். அச்சு ஊடகத்திலிருந்து, டிஜிட்டல் தளம் மற்றும் சமூக ஊடகங்கள் வரை, அதன் வீச்சு பரந்து விரிந்துள்ளது. எனினும், இன்றைய சமூக ஊடக உலகில், 'எடிட்டோரியல்' கட்டுப்பாடு இல்லாமல், எவர் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால், 'உண்மை' என்பது மங்கலாகி வருகிறது.
'முழுமையான உண்மை' என்பதற்கு பதிலாக, 'உன்னுடைய உண்மை' மற்றும் 'என்னுடைய உண்மை' என்ற கருத்துருவாக்கம் உருவாகியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு, மிகவும் ஆபத்தான போக்காகும்.
மேலும், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம், இன்று பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. மாநிலங்களின் தன்னாட்சி உரிமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இடையிலான சமநிலை, இன்று ஒரு விவாதப் பொருளாகி உள்ளது.
சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும் வேளையில், இந்திய மாநிலங்கள், இனி மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய குழந்தைகள் அல்ல. அவை தங்களின் சொந்த முடிவுகளை எடுக்க தகுதியுள்ள பெரியவர்களாக வளர்ந்துள்ளன. அதே வேளையில், ஒரு தேசமாக, நமது ஒட்டுமொத்த அடையாளத்தையும், பெருமையையும் மதிப்பது அவசியமாகும்.
இத்தகைய சூழலில், தினமலர் போன்ற பாரம்பரியமிக்க ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. சமூக ஊடகங்களில், செல்வாக்கிற்காக பரப்பப்படும் சரி பார்க்கப்படாத தகவல்களுக்கு மத்தியில், உண்மையான இதழியலின் அவசியத்தை தினமலர் நிலைநாட்ட வேண்டும்.
மாநிலங்களின் உரிமைகளுக்கும், தேசிய உணர்வுகளுக்கும் இடையிலான, ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்து, இந்திய கூட்டாட்சியின் எதிர்காலத்தை செதுக்கும் ஒரு பாலமாக தினமலர் செயல்பட வேண்டும். 'எடிட்டோரியல்' தரக்கட்டுப்பாடுகளை சமரசம் செய்யாமல், நேர்மையான செய்திகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதே உண்மையான வெற்றியாகும்.
தமிழக மக்களுக்கு, தொடர்ந்து, நம்பிக்கையான, சுதந்திரமான, நேர்மையான இதழியல் சேவையை வழங்கி வரும் தினமலர், வரும் காலங்களிலும், தனது அறப்பணியை தொய்வின்றி தொடர வேண்டும். சமூகத்தின் ஜனநாயக துாணாக நின்று, உண்மையை உரக்க சொல்லும் பாணியில் தினமலர் இன்னும் பல 75 ஆண்டுகளை வெற்றிகரமாக கடக்க, எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரவீன் சக்ரவர்த்தி
தலைவர், தரவு பகுப்பாய்வு பிரிவு, இந்திய தேசிய காங்கிரஸ்
