PUBLISHED ON : மே 18, 2026 12:00 AM

75 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க 'தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் தொலைநோக்குப் பார்வையால் இன்று அசைக்க முடியாத ஆலமரமாக அது வளர்ந்துள்ளது. சமூகத்தின் விழிப்புணர்விற்கு வித்திட்டு, உண்மையின் ஒளிகோபுரமாக திகழும் தினமலர், தனது பவள விழாவை காண்பது, தமிழ் இதழியல் உலகிற்கே பெருமை தரும் சாதனையாகும்.
செய்திகளை வழங்கும் ஊடகமாக மட்டுமல்லாமல், இளம் தலைமுறையின் எதிர்கால உருவாக்கத்திலும், சமூக அக்கறையுடன் மக்களின் பிரச்சினைகளை அதிகார மையங்களுக்கு எடுத்துச் சென்று தீர்வுகளுக்கான குரலாக இருப்பதும் தினமலரின் உயர்ந்த பங்களிப்பு. தினந்தோறும் கோடிக்கணக்கான வாசகர்கள் நம்பிக்கையுடன் கையில் ஏந்தும் இந்த நாளிதழ், நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது.
உள்ளூர் செய்திகள் முதல் உலக நிகழ்வுகளை ஒரே தளத்தில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது தினமலரின் சிறப்பம்சம். சிறுவர் மலர், வாரமலர், ஆன்மிக மலர் என, பலதரப்பட்ட வாசகர்களையும் கவரும் வண்ணம் தனித்துவமான உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது. அரசியல், தொழில், அறிவியல், ஆன்மிகம் என பல்வேறு துறைகளை சமநிலையுடன் அணுகும் ஆசிரியத்துவம் தினமலரின் வலிமை.
'உண்மையின் உரைகல்' என்பது வாசகம் மட்டுமல்ல, அது தினமலரின் உயிர்நாடி. இதுவே அதை ஒரு ஊடகத்தை தாண்டி, சமூகப் பொறுப்பின் சின்னமாக மாற்றியுள்ளது. தமிழ் சமூகத்துடன் வளர்ந்து, அவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியுள்ள தினமலர், இன்னும் பல தலைமுறைகளுக்கு ஒளி பாய்ச்சட்டும்.
உண்மையை உரக்க சொல்லும் உங்கள் எழுத்தாணி, இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் தமிழ்ச் சமூகத்தின் திசைகாட்டியாகத் திகழட்டும். தமிழ் மண்ணின் குரலாக தினமலர் ஒலிக்கட்டும். இந்த நல்வாய்ப்பில், பவள விழா கொண்டாடும் தினமலர் குடும்பத்தை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த பவள விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மரு. ந.மா. வீரையன்
நிறுவனர் மற்றும் வேந்தர்
சவீதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு, சென்னை
சவீதா அமராவதி பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம்
என்.எம்.வீ பல்கலைக்கழகம் தமிழ்நாடு, சென்னை
