/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
/
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM

'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் பூர்வீக கிராமம்தான் எனக்கும் பூர்வீகம். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவரது வீட்டில் இருந்து ஆறு வீடுகள் தள்ளியே எங்கள் வீடு இருந்தது! எனது தாத்தாவுக்கு டி.வி.ராமசுப்பையருடன் நல்ல நட்பு இருந்தது.
அப்போது நான் பத்து வயது சிறுவன். நாடெங்கிலும் சுதந்திர போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதுபற்றி எனது தாத்தாவும் அவரும் நிறைய பேசியதாக பின்னாளில் எனது தந்தை என்னிடம் கூற கேட்டிருக்கிறேன். இதனால், 'தினமலர்' நாளிதழ் உடனான எனது பந்தத்தை 'பூர்வீக கிராம பந்தம்' என்றும் சொல்லலாம்.
காலங்கள் பல கடந்து, 1991ல் சென்னையில், நானும் என் மனைவி டாக்டர் சூர்யகலாவும் இணைந்து, நடுத்தர குடும்ப மக்கள் பயன்பெறும் வகையில் சூர்யா மருத்துவமனையை நிறுவினோம். அச்சமயத்தில், எங்கள் மருத்துவமனை சார்ந்த செய்திகளை வெளியிட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்தது 'தினமலர்' நாளிதழ் தான்.
இப்படிச் சொல்வதனால், கண்களை மூடிக்கொண்டு எங்களைப் பற்றிய செய்தியை தினமலர் வெளியிட்டது என்று அர்த்தமல்ல!
மருத்துவ துறை மக்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்டது என்பதால், மிகுந்த கவனத்தோடு எங்கள் தரப்பு செய்திகளை ஆய்வு செய்தபின்பே பிரசுரித்தனர். ஒவ்வொரு செய்தியையும் பிரசுரம் செய்வதற்கு முன்பு பலமுறை பல கோணங்களில் விசாரிக்கும் வழக்கம் தினமலர் நாளிதழுக்கு உண்டு என்பதை 'தினமலர்' ஊழியர்கள் மூலம் நான் அறிந்திருக்கிறேன்.
நான் அறிந்தவரை, 'தினமலர்' குடும்பத்தினருடன் தொடர்பு அல்லது ஊழியர்களுடன் தொடர்பு இருந்தால் 'தினமலர்' நாளிதழில் செய்திகள் வெளியாகி விடும் என்றெல்லாம் கிடையாது. உண்மை இருந்தால் மட்டுமே செய்தி வெளியாகும். அச்செய்தி உண்மையை உள்ளது உள்ளபடி சொல்லும். நியாயத்தின் பக்கம் நிற்பது 'தினமலர்' நாளிதழின் தனித்துவ அடையாளம்.
அதேபோல, மருத்துவமனை பற்றிய அவதுாறான செய்திகள், அம்மருத்துவமனை மீது தீரா களங்கத்தை ஏற்படுத்திவிடும் சூழல் உண்டு. எனவே, அப்படியான செய்திகளின் உண்மை தன்மையை அறிந்து, தவறென்றால் அதை 'தினமலர்' தவிர்க்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன். மருத்துவ சிகிச்சை துறையின் வளர்ச்சிக்கு 'தினமலர்' ஆற்றிய பங்காகவே இதை பார்க்கிறேன்.
கடந்த 74 ஆண்டுகளாக நேர்மையுடன் சமூகப் பணியாற்றி வரும் 'தினமலர்' நாளிதழுக்கு, 'பவள விழா' வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் சி.பி. ஸ்ரீகுமார்,
நிறுவனர், சூர்யா மருத்துவமனை, சென்னை.

