தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/நறுமணம் பரப்பும் காகித மலர்

நறுமணம் பரப்பும் காகித மலர்

நறுமணம் பரப்பும் காகித மலர்


PUBLISHED ON : பிப் 22, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்', தினமும் மலரும் காகிதமலர். காகித மலர்தான் என்றாலும், நறுமணம் பரப்பும் மலர்.

சிலருக்கு அந்த மணம் மயக்கத்தைத்தரும். சிலருக்கு அது தலைவலியைத் தரும். சிலருக்கோ அது குமட்டவும் செய்யும். ஆனால், பல லட்சம் பேருக்கு அது மகிழ்ச்சியையே கொடுத்துக் கொண்டு இருக்கிறது. பல லட்சம் உள்ளங்கள் அறிந்து, புரிந்து, தெரிந்து மகிழ்கின்றன. ஆமாம்! 75 வருடங்களாக வரும் தொடர்கதை.

இது எல்லோராலும் ஆகிற காரியமா? இல்லை. இறைவன் இதுபோன்ற பணிகளுக்காக மிக மிகச் சிலரையே தேர்ந்தெடுக்கிறான். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புண்ணிய வானே திருவாளர் டி.வி.ராமசுப்பையர். அவர்கள் கொண்ட நேர்மை, ஒழுக்கம், உண்மை, சத்தியம் என்ற அறவழிகளில், அப்படியே இம்மியும் நகராமல் தொடர்கிறார்கள், அவரது சந்ததியினர். இது, எவ்வளவு பெரிய புண்ணிய பலம் என்பது, இதை படிக்கும் போதே அவரவருக்கும் புரியும். தலை தன்னாலே அசையும், சிலவேளைகளில் பெருமூச்சும் வரும்.

நான், அப்படி, முதன் முதலில் பெருமூச்சு விட்டது 1980ல், மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் போதுதான். நான் அதிலே ஒரு கண்காட்சி வைக்கவென இடம் கொடுக்கப்பட்டு, தங்குவதற்கான இடமும் ஒதுக்கப்பட்டு, மகிழ்வோடு இருந்தநேரம். எனது தந்தையார், மாநாட்டின் இரண்டாம் நாள், தினமலர் கிடைக்காமல் போன கவலையில், பல கடைகளுக்குப் போய் பார்த்து, ஒரு கடைக்காரரிடம் போய், 'மாநாடு முடியும் வரை தினமும் தினமலர் வேண்டும். காலியாகிப் போச்சு என்று சொல்லக் கூடாது . எதுக்கும் இந்தாருங்கள்...' என்று 20 ரூபாயை கொடுத்தார். அவர் மறுத்தாலும், இவர் விடவில்லை. கொடுத்துவிட்டு ஒருவித திருப்தியுடன் வந்தார்.

'ஏன் அப்பா தினமலர்? வேறு பேப்பர் இல்லையா?' என கேட்டேன். சிரித்தபடி என்னை உற்றுப் பார்த்துவிட்டு, 'தினமலர் மாதிரி வருமா? என்னமாதிரி அழகான படங்கள். எப்படியான ஒரு பிரின்ட்' என்றவர், தங்கியிருந்த 'காலேஜ் ஹவுஸ்' வந்ததும், அங்கு-இங்கு என எங்கும் கேட்டு, எப்படியோ முதல்நாள் பிரதியை வாங்கி வந்துவிட்டார். 'இங்க பார்! எப்படி இருக்கு' என்று முகம் மலர்ந்து காண்பித்தார். உண்மை, சத்தியம். ஆ! என்றேன் - பெருமூச்சுடன்.

அன்றைய அந்த நாளில் (இந்த நாளிலும் தான்) அந்த அழகுணர்வான பதிப்பை அடித்துக் கொள்ள ஆளில்லை. அன்றலர்ந்த தாமரை போலவே வண்ணமயமாய்த் திகழ்ந்தது. போலித்தனமான செய்திகள் மருந்துக்கும் இல்லை. கவர்ந்து விடவேண்டுமென்ற தலைப்புகள் இல்லை. இயல்பாய், உண்மையாய், அழகாய் இருந்தன.

'வாரமலர்' என்ற இணைப்பு வழங்கி ஒரு முன்னோடியாய்த் திகழ்ந்தது, தினமலர். புதிய ஒரு பாதையைத் திறந்து விட்டு, மக்களை பெருமிதப்பட வைத்தது. அது, மக்கள் பத்திரிகை அல்லவா! பாதை திறக்கப்பட்டால், அதில் அனைவரும் பயணிப்பது இயல்புதானே! வேறு பாதை போட்டுக்கொண்டிருத்தவர்கள் உட்பட.

ஏனோ தானோ என்று இல்லாமல், ஏகப்பட்ட விஷயங்களை தாங்கி வந்தது அது. வாசகர்களுக்குப் பரிசுகளைக் கிள்ளிக் கொடுக்காமல், அள்ளிக் கொடுத்தது. சன்மானங்களை வாரி வழங்கியது. ஆக்கங்களை உருவாக்கிப் பெற்று, இதழ்களை தாராளமாக விரித்தது தினமலர் என்ற பெருமலர்.

இதயம் விரிந்திருந்தால், இதழும் விரிந்தே இருக்கும். திறந்தே இருக்கும், சிறந்தே இருக்கும். நகைச்சுவைத் துணுக்கிற்கே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத தொகையைக் கொடுத்தது (கொடுக்கிறது). ஊக்கப் படுத்துவது என்பதில் தினமலருக்கு நிகர் தினமலரே தான்.

பத்ம வாசனாகிய எனக்கு இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒன்று, தினமலர் என்ற பெயரின் நடுவில் தாமரை. மற்றொன்று, 'தாமரை பிரதர்ஸ்' என்ற பதிப்பகம். ஏதோ, நானும் இதிலெல்லாம் இணைந்தே இருப்பது போன்ற பிரமை, பிரேமை.

'கோவிட்' மெல்ல குறைந்து வந்த காலமான 2021 டிசம்பரில், 'கோளறு பதிகம்' என்ற சம்பந்த பெருமானின் அருள் வாக்கை, படங்களோடு பிரசுரித்தால், மக்களுக்கு பெரும் உதவியாகவும், ஆறுதலாகவும், மருந்தாகவும் இருக்கும் என்று சொன்னதுதான் தாமதம். அடுத்தநொடி சம்மதம் சொல்லி, 11 நாட்கள், அரை பக்கத்தை ஒதுக்கி, மிக அழகாய் வெளியிட்டார்கள். அந்த அரை பக்கத்திற்கு விளம்பரம் போட்டிருந்தால் எவ்வளவு? என்ற கணக்கை நான் பார்த்தபோது ஆடிப் போய் விட்டேன். இதுதான் தர்மம் என்பது. இதுதான் பொதுநலம் என்பது. தலை முறை கடந்தும் புகழோடு வாழும். வாழ்வார்கள்.

தொடர்ந்து, 'இடர்களையும் பதிகம்' அதுபோலவே வந்தது. 'ராயல்டி' என்று 'டாண் டாண்' என கொடுப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே. எழுத்தாளர்களை, கலைஞர்களை, வாசகர்களை, மக்களை மதிப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே.

இந்த வானம், பூமி உள்ளவரை, அதிசயமான இந்த காகித மலர், மணம் பரப்பிய படியே இருக்கும். மக்களை மகிழ்வித்தபடியே இருக்கும் இது. இது ஆண்டவன் விருப்பம், ஆசி.



பத்மவாசன் ஓவியர் மற்றும் எழுத்தாளர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us