PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM

40 ஆண்டுகளுக்கு முன்பாக, எனது ஆளுமையை தீர்மானித்த ஆதிப்புள்ளி 'தினமலர்' நாளிதழ். இளங்கலை படிப்பை முடித்த கையோடு, உலகை பார்க்கும் ஒரு புதிய ஜன்னலாக எனக்கு கிடைத்தது தினமலர் பயிற்சி நிருபர் பணி. சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து, தினமலர் பிராட்வே பகுதி நிருபராக, நுாருல்லா அவர்களுக்கு உதவியாளராக தொடங்கிய பணி, என் வாழ்க்கை தடத்தில் ஒரு திருப்புமுனை.
ஒரு வார்த்தை தலைப்புகள், டீ கடை பென்ச், டவுட் தனபால், அந்துமணி பதில்கள், சிந்தனைக்களம், குறுக்கெழுத்துப் போட்டி என்று பல்வேறு கோணங்களில் தினமலர் நாளிதழ், உலகில் புரட்சியை ஏற்படுத்தி எழுந்த தருணம். அன்று ஒரு நிருபராக பேனாவை பிடித்தபோது, அந்த அனுபவம் தான், பிற்காலத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்களை வழிநடத்துவதில், எனக்கு பெருந்துணையாக இருக்கும் என நான் யூகிக்கவில்லை.
ஏராளமான பள்ளி மாணவகளுக்கு மொழி அறிவையும் பொது அறிவையும், தினமலரின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், நச்சின்றி விதைத்து வருகிறது. அதன் தரத்தை பார்த்து, அது பள்ளிகளுக்கு மட்டுமல்ல கல்லூரிக்கும் பயன்படும் என கருதி, எங்கள் சங்கரா கல்லூரியில் கடந்த ஐந்தாண்டுகளாக நுாறு பேருக்கு இலவசமாக வாங்கித்தந்து, வாசிப்பு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு மாதமும், அவ்விதழ்களில் இருந்து, இணையவழியாக போட்டித்தேர்வு வைத்து பரிசுகள் தருகிறோம். அத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் நூறுபேருக்கே அடுத்த மாத இதழ்கள் வழங்குவது என ஊக்குவித்து வருகிறோம். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படித்து பயன்பெறுகிறார்கள். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு அவை பயன்பட்டதாக நேரில் வந்து சொல்லுகிறார்கள். இதே போல, அனைத்து பள்ளி மாணவர்களுக்குமே பட்டம் சார்பாக போட்டித் தேர்வுகள் வைத்து, வினா-விடை போட்டி நடக்கிறது என்பதை அறிந்து மகிழ்கிறேன். இது ஒன்றே தினமலரின் பெரும் சேவைக்கு ஒரு சோறு பதம் என சொல்லலாம்.
எமது கல்லுாரியுடன் தினமலரின் நட்பு போற்றுதலுக்கு உரியது. எங்கள் கல்லூரில், நாணயவியல் மற்றும் தொல்லியல் குறித்த பல பன்னாட்டு கருத்தரங்களுக்கு மறைந்த தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், புரவலராக இருந்து, ஆய்வு நூல்களை வெளியிட்டார். ஆசிரியர் பத்மஸ்ரீ லஷ்மிபதி அவர்களும், ராமசுப்பு அவர்களும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பெரியவர்களுடன் பலமுறை கல்லுாரிக்கு வந்து, மாணவர்களை ஊக்கப்படுத்தி உள்ளனர்.
துல்லியமான செய்திகள், நவீன தொழில்நுட்பம், சமூக அக்கறை நம் பாரம்பரிய பண்பாட்டை பாதுகாத்தல் என அனைத்து தரப்பு மக்களின் மனசாட்சியாக, தினமலர் நாளிதழ் 74 ஆண்டுகளை கடந்து. பவள விழா ஆண்டில் பயணிக்கும் இத்தருணத்தில், தினமலர் குடும்பத்தில் ஒருவனாக நின்று வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்று நிருபராக நான் நேசித்த தினமலர், இன்று காஞ்சி ஸ்ரீமடம் நடத்தும் கல்லூரியின் முதல்வராக மாணவர்களின் அறிவை வளர்க்கும் கருவியாக தொடர்வது எனக்கு பெருமை அளிக்கிறது. அச்சு ஊடகத்துறையில் இன்னும் பல நூற்றாண்டுகள், தினமலர், முடிசூடா மன்னனாக திகழவும், அதன் கல்விப்பணிகள் தொடரவும், எல்லாம் வல்ல இறைவனையும், காஞ்சி பெரியவர்களையும் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
வாழ்க தினமலர்! வளர்க அதன் கல்வி தொண்டு!
-முனைவர் கலை. இராம. வெங்கடேசன்
முதல்வர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
