/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தினமலர் வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
/
தினமலர் வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM

'தினமலர்' நாளிதழின் பல லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்ற பெருமையிலும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தினமும் 'தினமலர்' இதழை படித்துக்கொண்டு பயன்பெற்று வருபவன் என்ற முறையிலும், 75வது ஆண்டில் நுழைந்து, தொடர்ந்து பத்திரிகை தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வரும், 'தினமலர்' நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரையும், இந்த நல்ல தருணத்தில் பாராட்டுவதற்கு, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆரம்ப காலம் தொட்டு இன்றைய நாள் வரை, ஒரு தரமான நாளிதழாக, 'தினமலர்' விளங்கி வருகிறது என்று சொன்னால், அது மிகையான பாராட்டுதல் இல்லை. நடுநிலையான கருத்து வெளிப்பாடுகள், மிகைப்படுத்தாத உண்மை செய்தி நிலவரங்கள், தீர்க்கமான தலையங்கம், கண்ணை கவரும் அச்சு கோர்ப்பு, தரமான விளம்பரங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கூடுதல் இணைப்புகள், மாணவ-மாணவியர் பயன்பெற பயிற்சி கட்டுரைகள், தொழில் துறை சிறப்பு செய்திகள் போன்றவை, 'தினமலர்' இதழின் தனித்துவ சிறப்பியல்புகள்.
ஆங்கில பத்திரிகைகளுடன், 'தினமலர்' நாளிதழையும் காலை எழுந்ததும் படித்தால்தான், அன்றைய நாள் முழுமை அடைந்ததாக எனக்கு தோன்றும். முக்கிய பண்டிகை மற்றும் தேசிய நாட்களில் கூட, விடுமுறையை கணக்கில் கொள்ளாமல், வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 'தினமலர்' நாளிதழை வெளியிடுவது, தங்கள் இதழின் சலிக்கா உழைப்புக்கு ஒரு உதாரணம்.
இவ்வளவு ஆற்றல்மிகு சாதனைகள் அனைத்தும், 'தினமலர்' நிர்வாகத்தினரின் தனித்துவ திறமைகளால் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. பத்திரிகை தொழிலில் 'தினமலர்' இதழின் தனித்துவ செயல்பாடுகள் என்றென்றும் நிலையான புகழையும், பெருமையையும், நிர்வாகத்தினருக்கு வழங்கிக் கொண்டே இருக்கும்.
இப்படிக்கு,
ஆர்.ஸ்ரீனிவாசன்,
இயக்குநர், டி.வி.எஸ்., பள்ளிகள்,
லக்ஷ்மி வித்யா சங்கம்.