PUBLISHED ON : மார் 27, 2026 12:00 AM

தமிழ் மக்களின், அன்றாட வாழ்க்கை முறையாக சிறப்பிக்கப்படும் 'தினமலர்' நாளிதழ், தன் 75ம் ஆண்டு விழாவை கொண்டாடுவது, தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை. தினமலர் நாளிதழ் செய்திகளை மட்டும் வழங்கும் கருவியாக இல்லாமல், சமூக மாற்றத்திற்கான ஊக்கமாகவும், பொதுமக்களின் குரலாகவும் ஒலிக்கிறது.
கடந்த ஏழு தசாப்தங்களாக, மக்கள் மனங்களில் நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் கட்டி எழுப்பிய சிறப்புடைய ஊடகமாக தினமலர் திகழ்கிறது. அரசியல், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, கலாசாரம் என, பல்வேறு துறைகளின் செய்திகளை, எளிய தமிழில், நேர்மையான அணுகுமுறையுடன் மக்களிடம் கொண்டுசெல்வது தினமலரின் சிறப்பு.
அந்த பணியை, மிகவும் பொறுப்புடனும் பக்குவத்துடனும், கடந்த 75 ஆண்டுகளாக செய்து வருவது பாராட்டத்தக்கது. செய்தித்துறையில் தினமலரின் பயணம், தமிழ் பத்திரிகை துறையின் வளர்ச்சிக்கான அடையாளமாகும். பத்திரிகை சுதந்திரம், சமூக நீதிக்கான குரல், பொதுமக்களின் உரிமைகளுக்கான ஆதரவு ஆகியவற்றை அச்சு பக்கங்களில் தாங்கி, மக்கள் மனங்களில், பாராட்டை பெற்றிருக்கிறது தினமலர்.
ஞாயிற்றுக்கிழமையானால் வாரமலர், வெள்ளிக்கிழமை என்றால் சிறுவர் மலர் என, பெரியோர் முதல் குழந்தைகள் வரை, தினமலர் வாசிக்க காத்திருப்பது, இந்த பத்திரிகை மக்கள் மனதை கவர்ந்து கொண்டதன் வெளிப்பாடு. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை தழுவிக் கொண்டு, இணைய தளங்கள், மொபைல் செயலிகள், டிஜிட்டல் பத்திரிகை என, பல்வேறு படிவங்களில் வாசகர்களை சென்றடைவது காலத்தின் தேவையை உணர்ந்த செயல்.
தினமலர், காலத்தோடு கைகோர்த்து முன்னேறுவதோடு, தன் அடிப்படை மதிப்புகளை பாதுகாத்திருப்பது, அதன் வலிமை. கடந்த 75 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல், ஆனால், இது ஒரு நிறைவு அல்ல. இது இன்னும் நீண்ட பயணத்தின் துவக்கம் மட்டுமே. தமிழ் மொழியையும், தமிழர் வாழ்க்கை முறையையும், சமூகத்தின் மாற்றத்தையும் பிரதிபலிக்கக் கூடிய, இன்னும் பல சாதனைகளை தினமலர் மேற்கொள்ளும் என, நம்புகிறேன்.
இந்த பொற்காலக் கொண்டாட்டத்தில், தினமலரின் நிர்வாகிகளுக்கும், முன்னோடி ஆசிரியர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் எப்போதும் அன்புடன் துணை நிற்கும் வாசகர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் வசந்த்
லோக்சபா எம்.பி., கன்னியாகுமரி மற்றும் பொதுச்செயலர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
