PUBLISHED ON : மார் 20, 2026 12:23 AM

அரை நுாற்றாண்டு கண்ட அரசியல் வரலாறு உள்ள அ.தி.மு.க.,வின் தொடக்கமாக 1973ல் திண்டுக்கல்லில் லோக்சபா இடைத்தேர்தல் நடந்தது. தமிழக அரசியலில் திருப்பு முனையாக அமைந்த தேர்தல் அது. அத்தேர்தல் அறிவித்த போது தி.மு.க.,விடம் இருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து வந்து ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தன. தி.மு.க., சார்பில் பொன்முத்துராமலிங்கம், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் சித்தன் களமிறங்கினர். அ.தி.மு.க., சார்பில் மாயத்தேவரை எம்.ஜி.ஆர்., வேட்பாளராக அறிவித்தார். தி.மு.க., எதிர்ப்புகளை தவிடு பொடியாக்கினார். எம்.ஜி.ஆர்., 1973 மே 21 இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. அன்று ஆரம்பித்தது அ.தி.மு.க.,வின் அரை நுாற்றாண்டு அரசியல்.
அதன் பின், ஒரு பிரசாரத்திற்கு திருநெல்வேலிக்கு சென்று இருந்தோம். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினோம். மறுநாள் அதிகாலை நடைபயற்சி செய்தோம். நடைபயிற்சி சென்ற பகுதியில் தினமலர் நாளிதழ் நிறுவனர் ராமசுப்பையரின் வீடு அமைந்திருந்தது. அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த ஒருவர், ‛தம்பி யாருப்பா நீங்க' என விசாரித்தார். அப்போது, 'நான் திண்டுக்கல் சீனிவாசன்', என அறிமுகம் செய்து கொண்டேன். மாயத்தேவரும் என்னுடன் வந்திருந்தார்.
திண்ணையில் அமர்ந்திருந்தவர், ‛நான் தினமலர் நாளிதழ் உரிமையாளர்' என தன்னை அறிமுகம் செய்துகொண்டு, யார் யாரெல்லாம் வந்திருக்கிறீர்கள் என்ற விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். வீட்டின் திண்ணையில் எங்களை அமர வைத்தார். வீட்டில் இருந்தவர்களை அழைத்து, காபி தரச் சொல்லி உபசரித்தார்.
'எங்கள் பத்திரிகை வளர எம்.ஜி.ஆர்.,தான் காரணம் அவர் நல்ல மனிதர். அவர் செய்கிற காரியங்களை நாங்கள் வெளியிடுகிறோம். அதனால் எங்கள் நாளிதழ் பிரமாதமாக வளர்கிறது தம்பி' என, என்னிடம் தெரிவித்தார். அப்போது, அ.தி.மு.க., எதிர்க்கட்சியாகவும், முதல்வராக கருணாநிதியும் இருந்த காலம்.
அதன் பின், தி.மு.க.,வில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் பி.ஆர்.எட்மன்ட் தலைமையில், மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஏற்பாட்டில் பாராட்டு விழா நெல்லையில் நடந்தது. அந்த விழாவில் நானும் 15 நிமிடங்கள் பேசினேன். மறுநாள், திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் பேசினார் என, முதன் முதலில் என் பெயர் பொது வெளியில் வெளிப்படுத்தியது தினமலர் நாளிதழ் மட்டுமே.
நிகழ்ச்சிக்கு மறுநாளும் அங்கு தங்கியிருந்தோம். அப்போதும் பார்த்த நிறுவனர் ராமசுப்பையர் , 'தம்பி நீங்க பேசியதெல்லாம் பிரசுரித்துள்ளோம்' என தெரிவித்தார். அன்றிலிருந்து எனக்கும் தினமலருக்கும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட்டு விட்டது. இன்று வரை தினமலர் நாளிதழ் படிக்காத நாட்களே இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தினமலர் நாளிதழின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன். தினமலரை பொறுத்தவரை, தேசியமும் தெய்வீகமும் அதன் இரு கண்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போல், தான் கொண்ட கொள்கையில் வழி தவறாது, சிறிதும் தயக்கமின்றி உண்மையின் உரைகல்லாக செய்திகளை வெளியிடும் ஒரே நாளிதழ் தினமலர் மட்டுமே. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்னையில் நீதிமன்றத்திற்கே உண்மையை விளக்கிய தினமலர் நாளிதழுக்கு எனது நன்றிகள். யாருக்கும் எதற்கும் எக்காலத்திலும் சமரசம் செய்யாத நெஞ்சுரம் கொண்ட துணிச்சல்.
சமீபத்தில், தினமலர் சார்பில் வெளிவந்த கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பேசியிருக்கிறேன். எப்படி வெற்றி பெறுவோம் என, நிருபர்கள் கேட்பார்கள். நான், 'தினமலரை பாருங்கப்பா தெரியும்' என கூறிவிடுவேன். அந்தளவிற்கு நடுநிலையோடு இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் உணர்ந்து செய்திகளை தருவதில் தனித்திறன் உண்டு.
இன்னும் பல நுாறாண்டுகள் வெளிவந்து, தினமலர் நாளிதழ் வானுயரம் காண, ஒரு ரசிகனாகவும், வாசகனாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
'திண்டுக்கல்' சீ.சீனிவாசன்
அ.தி.மு.க., பொருளாளர்
***
