'என் சிந்தனைகளை வாதமாக மாற்ற அடித்தளமிட்டது தினமலர்'
'என் சிந்தனைகளை வாதமாக மாற்ற அடித்தளமிட்டது தினமலர்'
PUBLISHED ON : பிப் 14, 2026 01:37 AM

நான் கல்லுாரியில் படிக்கும் காலத்தில், ஆங்கில தினசரி படிப்பது தான் கவுரவம் என்ற கருத்து பரவலாக இருந்தது. தமிழில், மிகவும் இலக்கண சுத்தமான, தமிழ்ப் பதங்கள் அல்லது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட தமிழில் தரப்பட்ட சுவாரசியமான தகவல்கள் எனும் இரண்டு வகைகளில் தான் தமிழ் ஊடகங்கள் இருந்தன. அவற்றுக்கு மாற்றாக, ஆங்கில பத்திரிகைகளுக்கு இணையான பதிப்பு தரம், புகைப்படங்கள், நடைமுறை தமிழ், உள்ளூர் முதல் உலக செய்திகள் வரையிலான பார்வை ஆகியவை கூடிய, 'தினமலர்' நாளிதழ், இளைஞர்களின் ஆதர்சமாக உணரப்பட்டது.
ஒரு செய்தியை பதிவு செய்யும் போது, அதன் முந்தைய சம்பவங்களின் சாரத்தை நினைவூட்டும் விதமும், நடுநிலை தவறாமல் செய்திகளை பதிவு செய்யும் விதமும், ஒரு சட்டக்கல்லுாரி மாணவனாக, என் சிந்தனைகளை வாதமாக மாற்றும் திறமைக்கு தினமலர் இதழ் தான் அடித்தளமிட்டது என்று நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
ஆன்மிக தகவல்களுக்கு பெரும் முக்கியத்துவம் தந்து, முக்கியமான கவனிப்பு பெறும் விதமாக தலைப்பு மற்றும் புகைப்பட இணைப்புகளோடு பதிப்பிடும் ஒரே தேசிய நாளிதழ் தினமலர் மட்டுமே! சமீபத்தில், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுஷேகர பாரதீ ஸ்வாமிகள், புதுடில்லியில் யாத்திரை மேற்கொண்டபோது, அங்கு நிகழ்ந்த பெரும் ஆன்மிக எழுச்சியை, தினமலர் நாளிதழில் மிகச் சரியாக பதிவு செய்ததை நினைவு கூர்கிறேன்.
அன்று முதல் இன்று வரை, தினமலரின் தனித்துவமான, 'தேசிய-ஆன்மிக- கலாசார' திசையும், தடமும் மாறாமல், ஆதரவு கண்டு துள்ளாமலும், எதிர்ப்புகள் கண்டு துவளாமலும், ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது என்பதும், அந்தப் பயணம் தமிழர்களின் பேராதரவோடு தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது என்பதும் வரலாற்று சாதனைகள்.
மேலும் பல சாதனைகளை படைத்து, தேசப்பணி ஆற்ற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
என்.வெங்கடராமன்
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்- இந்தியா
