/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
குறைந்த வார்த்தைகளில் நிறைந்த பொருள்
/
குறைந்த வார்த்தைகளில் நிறைந்த பொருள்
PUBLISHED ON : டிச 11, 2025 12:00 AM

ஊடகத்துறை என்பது மிகப்பெரிய பொறுப்பு. பொறுப்பை எப்படி அணுகுகிறோம் என்பதற்கு 'தினமலர்' ஓர் முன்னுதாரணம். ஆங்கிலத்தில், 'ஸர்வீஸ் இன் மைண்ட், நேஷன் பர்ஸ்ட்' என்பார்கள். அப்படி தேசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூக சேவையாக கருதி 'தினமலர்' செயல்படுகிறது.
நான் 12 வயதிலிருந்து 'தினமலர்' படித்து வருகிறேன். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 'தினமலர்' வாசகன். மிகவும் எளிதான நடையில், அருமையான மொழித்திறனோடு, ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்தையும் கவனம் சிதறாமல் படிக்கும் வண்ணம் செய்திகள் அமைந்திருக்கின்றன. படித்து முடித்த பின், 'நான் இன்று நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்' என்ற திருப்தியான உணர்ச்சி ஏற்படும்.
உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை; அரசியல் செய்தி முதல் அறிவியல் செய்தி வரை என அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை, உண்மை தன்மை அறிந்து, குறைவான காலகட்டத்தில் தரமான செய்திகளை வழங்குவதில் தினமலருக்கு நிகர் 'தினமலர்' தான். அதே போல், கொரோனா, ஆபரேஷன் ஸிந்தூர் என அந்தந்த செய்தி பருவத்திற்கு ஏற்ப, தேவையான செய்திகளையும் விழிப்புணர்வு கட்டுரைகளையும் வழங்குவதில் முன்னோடி 'தினமலர்'. குறிப்பிட வேண்டிய மற்றொன்று, 'பாஸிடிவ் வைப்ரேஷன்' தரும் செய்திகள் தினமலரில் அதிகம்.
ஏழு வார்த்தை இருக்கும் ஒரு திருக்குறளில், ஒரு கட்டுரை எழுதும் அளவிற்கு பொருள் இருக்கும். அதைப்போல, தினமலரும் குறைந்த வார்த்தைகளில், நிறைந்த பொருளை தருகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில், ஸோஷியல் மீடியாவில் செய்திகள் வருகின்றன. அதிலும், 'தினமலர்' உடனடியாக செய்திகளை வெளியிடுகிறது. ஆனால், ஸோஷியல் மீடியா செய்திகளை, அதை வெளியிடுவோர் எடிட் செய்யலாம், மாற்றலாம், அழித்தும்விடலாம். நாளிதழில் தகவல்களை அப்படி செய்ய முடியாது. அதனால், டிஜிட்டல் உலகத்திலும் நாளிதழில் பிரசுரமாகும் செய்திகளே நம்பிக்கையானவை.
செய்திகள் ஒரு புறம் இருக்க, பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் 'தினமலர்' முன்னோடியாக இருக்கிறது. சிறு, குறு தொழிலுக்கு ஏற்ற நிகழ்வுகள், கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ற நிகழ்வு என அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான நிகழ்வுகளை நடத்தி, வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் 'தினமலர்' எக்ஸ்பர்ட்.
கல்வி நிறுவனங்கள் நடத்துவதால், நான் சிறப்பாக குறிப்பிட விரும்புவது தினமலரின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழை. பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அறிவியல், சமூக அறிவியல், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மிகவும் அறிவுபூர்வமாகவும், பார்த்துப்பார்த்து கவனமாகவும் வழங்குகிறது 'பட்டம்' இதழ். மேலும், குழந்தைகளை நல்வழி படுத்துவதற்கு என்ன மாதிரியான செய்திகள் தேவையோ, அதை அனைத்தையும் வழங்குகிறது.
இப்படி பல்வேறு சிறப்புகளுடைய தினமலரின் பணி, 75 ஆண்டுகளையும் தாண்டி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
எஸ்.மோகன்தாஸ் அறங்காவலர்:

