/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
சங்கத்தமிழ் பூமியின் அங்கம் 'தினமலர்'
/
சங்கத்தமிழ் பூமியின் அங்கம் 'தினமலர்'
PUBLISHED ON : டிச 22, 2025 01:21 AM

அதிகாலை காபி; சூரிய உதயம்; வாசலிடும் மாக்கோலம்; சுடச்சுட 'தினமலர்'. இவை, புறநானூற்று பூகோளத்தின் புலர்காலை விடியல் தோரணங்கள்.
நடந்ததை சொல்லும் நாளிதழ்களுக்கு மத்தியில், அது எப்படி, எதற்காக, யாரால், ஏன் என பின்னணியையும் சேர்த்தே சொல்வதால், சமூகம் தினமலரை 'சங்கதிகளின் சமத்து' என்கிறது. சேதி உரைப்பதில் நேர்த்தி என, சொல்கிறது.
உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை, அத்தனை முணுமுணுப்புகளையும், சுவையோடும், சுவாரஸ்யத்தோடும் பந்திக்கு வைக்கும் அதன் 'டீ கடை பெஞ்ச்'. கரித்துண்டு எடுத்து ஊர்ச்சுவற்றில் எழுதும் சமூக ஆர்வ எழுத்தாளர்களுக்கு எழுத்து மேடை அமைத்துக் கொடுக்கும் 'இது உங்கள் இடம்'. சொன்னது யார் என முகபேதம் பார்க்காமல், சொல்லப்பட்டது யாது என்று தரம் பார்த்து, அரசியல் தலைவர்களோடு, அரசியல் முனைவோர்களையும் ஊக்கப்படுத்தும் 'பேச்சு பேட்டி அறிக்கை'.
இவையாவுக்கும் மேலாக, இன்றைய செய்திக்கு, நாளைய தினமலரின் தலைப்பு என்னவாக இருக்கும் என வாசகர்களை கடந்து வழிப்போக்கர்களிடமும் , ஆர்வத்தை தூண்டும், தினமலரின் முகப்புப் பரிவட்டங்கள் என, தமிழுலகை தனக்குள் வசியம் செய்து வைத்திருக்கும் பவள விழா நாயகநான தினமலர், லட்சோப லட்சம் வாசகர்களுக்கு ஆசானாக திகழ்கிறது.
போட்டித் தேர்வுகளுக்கான அறிவார்ந்த மாணவ சமூகத்தை சிருஷ்டிக்கும் சிற்பக் கூடாரமாக, உயரிய தொண்டூழியத்தையும் அது பன்னெடுங் காலமாக மேற்கொண்டு வருவதோடு, தேன்தமிழ் தினப்பணியாலும், தேசப்பற்றுடனான தெய்வீக அறப்பணியாலும், சங்கத்தமிழ் பூமியின் சரித்திரத்தில் அங்கம் பதித்து நிற்கிறது தினமலர்.
ஆம், உடலுக்கும் தலைக்கும் பாலம் அமைக்கும் சங்குக் கழுத்துப்போல், மானுட சமூகத்தின் தலைவர்களில் தொடங்கி கடைக் கோடி மக்கள் வரை பின்னிப் பிணைக்கும் பவள விழா சாதனை தினமலருக்கு, கால்சட்டை அணிந்த காலம் தொடங்கி வாசித்து நேசிக்கும் அதன் வாசகனாக, எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
- மருது அழகுராஜ்
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணைத் தலைவர்
***

