PUBLISHED ON : மே 20, 2026 12:13 AM

1975 இறுதியில், தேதி நினைவில் இல்லை. அப்போது நான் ஒன்றுபட்ட, திருநெல்வேலி மாவட்டத்தின், இளைஞர் காங்கிரஸ் தலைவர். எங்கள் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 'தினமலர்' அலுவலகத்தை ஒட்டிய, அடுத்த வளாகம். எங்கள் அலுவலகத்தில் இருந்து, தினமலர் நிறுவனர் பேராளர் ராமசுப்பையர் வீடு, மூன்றாவது கட்டடம்.
மாலை 5:00 மணி. அவர்கள் வீட்டிற்கு சென்றேன். வீட்டிற்கு வெளியே உள்ள, சாய்வான சிமெண்ட் திண்ணையில், ஒரு அரை வேட்டி மற்றும் மேல் துண்டோடு, அவர் சாய்ந்து அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், 'யாருய்யா' என்று கேட்டார். என் பெயரை சொல்லி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்று சொன்னனேன்.
'என்ன விஷயம்' என்று கேட்டார். ஒரு அறிக்கை எழுதி கொண்டு வந்துள்ளேன். அதை தினமலரில் சற்று பெரிதாக வெளியிட வேண்டும் என்று சொன்னேன். அறிக்கையை வாங்கி பார்த்து விட்டு, அதில் கையொப்பமிட்டு, 'எடிட்டோரியல் செக்ஷனில் கொடு' என்றார். நான் நின்று கொண்டே இருந்தேன். வேறு என்ன என்று கேட்டார். நான் மெதுவாக என் போட்டோவையும் போட சொல்ல வேண்டும் என்று சொன்னதும், பெரிதாக சிரித்து விட்டார். நீ அவ்வளவு பெரிய தலைவரா என்று என்னை பார்த்து சிரித்துவிட்டு, 'உனக்கு எந்த ஊர்' என்று கேட்டார்.
ஊரின் பெயரை சொன்னதும், எங்கள் தாத்தாவின் பெயரை சொல்லி, அவரை தெரியுமா என்றார். நான் அவரது பேரன்தான் என்றதும், அப்படியா உட்காரப்பா என்றார். நான் உட்காரவில்லை. உள்ளே அம்மாவுக்கு குரல் கொடுத்து, காபி தர சொன்னார். காபி சாப்பிட்டதும், காங்கிரஸ் கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என, அரைமணி நேரம் அறிவுரை வழங்கினார்.
நான் நின்று கொண்டே கேட்டுக் கொண்டிருந்தேன். விடை பெற்று வெளியே வந்ததும், எனக்காக காத்திருந்த நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம். தினமலர் பத்திரிகையின் நிறுவனர், சுதந்திரப் போராட்ட வீரர், பழுத்த தேசியவாதி. தன் சொத்து, மனைவியின் நகைகள் உட்பட அனைத்தையும் விற்று, யாரும் செய்ய துணியாத, பத்திரிகை தொழிலை தொடங்கி, தேசியம் வளர்த்த ஒரு பேராளர், என்னிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததை, என் நண்பர்களால் நம்ப முடியவில்லை.
மறுநாள் காலை தினமலரில், எனது அறிக்கை மூன்று பத்தியில், எனது போட்டோவோடு வந்ததைப் பார்த்து, நான் சிலாகித்து போனேன். தினமலர் நிறுவனர் ராமசுப்பையரோடு, இப்படி ஆரம்பித்த எனது தொடர்பு, பின்னர் வாரத்திற்கு இரு முறையாவது, சந்தித்து அளவளாவும் அளவுக்கு தொடர்ந்தது.
என்னைப் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை என்று சொல்லுமளவுக்கு, என்னை மாவட்டம் முழுதும் பிரபலப்படுத்தியது தினமலர் என்பதை, நான் நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
அப்போது தமிழகத்தில் பிரபலமாக இருந்த, சில தினசரி பத்திரிகைகள், காங்கிரசை கடுமையாக எதிர்த்து, தி.மு.க.,வை ஆதரித்த வேளையில், காங்கிரசையும், காமராஜரையும், பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்த பெருமை, தினமலருக்கு உண்டு. எங்களைப் போன்ற, ஜாதிய பெரும்பான்மை பின்னணி இல்லாத, இடைப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த, அரசியல் ஆர்வம் கொண்டவர்களை, பொது சமூகத்தின் பார்வைக்கும், வெளிச்சத்திற்கும் கொண்டு வந்த பெருமை தினமலருக்கு உண்டு.
தென் மாவட்டங்களில் மட்டுமே பிரபலமாகி இருந்த தினமலர், தமிழகம் முழுதும் வாசித்து மகிழும் தினசரியாக விரிந்த சரித்திரத்திற்கு பின்னர், பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான காரணத்தை, நான் சொல்லியாக வேண்டும். அதுதான் தினமலரின் 'போர்க்குணம்'. எதைப் பற்றியும் பயப்படாமல், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தான் எடுத்த நிலைப்பாட்டின் நியாயங்களில், இறுதிவரை உறுதியாக நிற்பது. அதன் விளைவுகளைப் பற்றி, என்றுமே தினமலர் கவலைப்பட்டதில்லை.
சில செய்திகளை மறைக்காமல், அப்படியே வெளியிட்டதற்காக, தினமலர் அலுவலகங்கள் மீது ஏவப்பட்ட கொடும் வன்முறைகளை, நான் அறிவேன். அத்தகைய சம்பவங்களுக்கு பின், முன்பை விட மிகவும் வேகமாக, அதே செய்திகளை, மேலும் பல ஆதாரங்களோடு வெளியிடுவதை, தினமலர் தனது கொள்கையாகவே வைத்திருந்தது.
அடிக்க, அடிக்க மேலே எழும் பந்து போல், தங்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளைக் கண்டு பொங்கி எழுந்ததுதான், தினமலரின் வரலாறு. அரசு விளம்பரங்கள் இல்லாமலே, தினமலர் பல ஆண்டுகள் வெளி வந்ததை நான் அறிவேன். அச்சப்படாமலும், தன் நிலைப்பாட்டின் நியாயங்களில் இருந்து தவறாமலும், பொருளாதார ஆதாயங்களுக்காக சோரம் போகாமலும், முக்கால் நுாற்றாண்டு வெற்றிப் பயணம் செல்லும் தினமலரை பார்த்து, நான் வியந்து நிற்கிறேன்.
இன்று தினமலர் தமிழ்சமூகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அடையாளங்களுள் ஒன்று. ஏழரைக்கோடி தமிழர்களது மனச்சாட்சியின் குரல். 1975ல் தினமலரோடு துவங்கிய, என் வாசிப்பு பயணம், இன்று வரை தொடர்கிறது. எத்தனை ஆங்கிலப் பத்திரிகைகள் படித்தாலும், தினமலர் படித்தால் தான், அந்த நாள் நிறைவு பெறுகிறது.
சில நேரங்களில், நான் ஏற்றுக் கொண்டுள்ள கருத்தியலுக்கும், நிலைப்பாட்டிற்கும், எதிரான செய்திகளை தாங்கி வரும்போது, தினமலரின் மீது கோபம் வரும். ஆனால், தினமலரை அன்றாடம் படிப்பதை தவிர்க்க முடியவில்லை. இது எனது நிலை மட்டுமல்ல. லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை. தமிழர்களின் தவிர்க்க முடியாத வாழ்க்கை பழக்கமாக தினமலர் உருவாகி இருப்பதே உண்மை.
ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க, எதிர்பார்ப்புகள் இல்லாமல், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், நெஞ்சுருதியுடன் செயலாற்றும் பத்திரிகைகள் வேண்டும். அந்த இலக்கணத்தை அப்படியே நிறைவேற்றி வரும் தினமலர், தனது பயணத்தில், புதிய சிகரங்களைத் தொட, அதன் 50 ஆண்டு கால வாசகனாக வாழ்த்துகிறேன்.
சா.பீட்டர் அல்போன்ஸ்
முன்னாள் காங்கிரஸ் எம்.பி.,
