
தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட பத்திரிகை தான் தினமலர்.
எந்த கட்சியையும் சாராமல், அரசின் தவறுகளையும் ஆட்சி நடத்துவோரின் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதில் 'தினமலர்' காட்டும் துணிச்சல் தனித்தன்மை வாய்ந்தது. அதே போல் தான், சாமானிய மக்களின் பிரச்னைகளை வெளிக்கொணரும் அதன் திறனும்.
எந்த கட்சியையும் சாராமல் 'தினமலர்' நாளிதழ் நம்பிக்கையுடன் வளர்ந்தது. இந்த நம்பிக்கையை மக்கள் மனதில் 'தினமலர்' நாளிதழ் வளர்த்தது. உண்மையை கொண்டாடுவது தான் 'தினமலர்' வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று உரத்துச் சொல்லலாம்.
'தினமலர்' செய்திகளை வாசிக்கும்போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் முதல், வணிக நிலவரம் வரை அனைத்துத் தகவல்களும் கிடைக்கின்றன. இது, அந்தந்த துறை வாசகர்களை ஈர்க்கிறது. 'தினமலர்' ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் ஒரு அங்கமாகவே விளங்குகிறது.
ஒருவரே ஒரு தொழிலை தொடங்குவது பெரியது. அந்த தொழிலை தொடர்ந்து பல தலைமுறைகளாக காப்பாற்றுவதும் பெரிது. 'தினமலர்' நாளிதழ் அந்த வெற்றி சாதனையை படைத்திருக்கிறது.
'தினமலர்' இந்நிலைக்கு வர காரணம், அதனுடைய தரம், தொழில்நுட்ப மேம்பாடு, சரியான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கும் திறமை ஆகியவையே. இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை விடவும் நம்பகமான செய்திகளை வழங்குவது ஒரு சவால். அந்த சவாலை 'தினமலர்' வெற்றிகரமாக கடந்திருக்கிறது.
தமிழர்களின் வாழ்வில், 'தினமலர்' 75 ஆண்டுகளாக தொடர்ந்து பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்த பவள விழாவில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழ் குழுவினருக்கு எனது பாராட்டுகள்.
கே.டி. ஸ்ரீநிவாசராஜா
மேலாண் இயக்குனர்,அடையார் ஆனந்த பவன்

