'வாசிப்புக்குள் என்னை இழுத்து வந்தது சிறுவர் மலர்'
'வாசிப்புக்குள் என்னை இழுத்து வந்தது சிறுவர் மலர்'
PUBLISHED ON : பிப் 02, 2026 01:50 AM

மூன்றாம் வகுப்பு ஆண்டு தேர்வு விடுமுறையில், விளையாட்டின் போது, பக்கத்து வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 'சிறுவர் மலர்' வார இதழ்களை ஆர்வமுடன் பார்த்தேன்.
இரண்டு ஆண்டுகளில் வந்தவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். ஒரு இதழை கேட்டுப் பெற்று, அங்கேயே வாசித்தேன். கண்களை வசீகரிக்கும் வண்ண வண்ணப் படங்களுடனான கதைகள் வெகுவாக ஈர்த்து என்னை வேறு உலகத்தில் சஞ்சரிக்க வைத்தன. உற்சாகத்துடன் கழிந்தன நிமிடங்கள். இதழை முழுமையாகப் படிக்க வீட்டுக்கு கொண்டு செல்ல அனுமதி கேட்ட உடன் இன்னொன்றையும் புன்னகையுடன் சேர்த்து கொடுத்தனர். தினசரி இரண்டு இதழ்கள் என அவர்கள் கட்டுக்குள் அடுக்கி வைத்திருந்தவற்றை முழுமையாக வாசித்து மகிழ்ந்தேன்.
பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்புக்குள் என்னை இழுத்து வந்தது சிறுவர் மலரே. அதன் பின் என் நச்சரிப்புக் காரணமாக 'தினமலர்' நாளிதழை வீட்டில் வாங்க ஆரம்பித்தனர். வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்த பால்ய வயதின் நாட்கள் நினைவில் மின்னுகின்றன. வயது ஏற ஏற வாரமலரை வாசித்து, அதன் பின் ஆன்மிக மலரில் உலவிக் கொண்டிருக்கிறேன்.
பதினைந்து வருடங்களுக்கு முன் இது உங்கள் இடம் பகுதியில் எனது கடிதம் வெளியானது என் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான நிகழ்வு. தொடர்ந்து, தினமலர் மதுரை பதிப்பில், 'என் பார்வையில்' பகுதியில், நான் எழுதிய பல கட்டுரைகளுக்கு மின்னஞ்சலில் வரும் பின்னூட்டங்கள், அடுத்தடுத்து என்னை மேம்படுத்தி முன்செல்ல உதவின. இன்று நான்கு நூல்கள் எழுதியுள்ளேன். வெகுஜன இதழ்களில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதுகிறேன். எனக்கான அடையாளமான எழுத்தை வசப்படுத்தியதில் எழுத்தாளர் என நான் உருவானதில் தினமலருக்கு முக்கிய பங்கு உண்டு.
-ஜெ. தீபா நாகராணி
எழுத்தாளர் & தன்னம்பிக்கைப் பேச்சாளர், மதுரை.
