PUBLISHED ON : மார் 16, 2026 02:10 AM

ஏறக்குறைய 50 ஆண்டுகளாக 'தினமலர்' வாசிக்கும் பழக்கம் உண்டு. தினமலரை படிக்கத் துவங்கினால், அதுவே ஒருவருக்கு காலை உணவாக இருக்கும். முன்பெல்லாம், எங்கள் குடும்பத்தில், அனைவரும் சேர்ந்து தினமலர் வாசிக்கும் பழக்கம் உண்டு. குடும்பத்தில் பெண்கள் விரும்பிப் படிக்கக் கூடிய ஒரு நாளிதழாக வளர்ந்து வந்தது தினமலரின் முதன்மை சிறப்பு. குடும்பத்தில் அனைவரும் ஏதுவாக, உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை, அரசியல் செய்தி முதல் ஆன்மிக செய்தி வரை, மக்களின் மனதை படம் பிடிக்கும் கால கண்ணாடியாக தினமலர் செயல்படுகிறது.
அரசியல் துறையில், அன்றாட அரசியலை மிக துல்லியமாக மக்களுக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. குறிப்பாக, டீக்கடை பெஞ்ச் படிக்காமல் இருந்ததில்லை; அன்றாட அரசியல் அரட்டை அற்புதம். வாரமலரில் வரும் அந்துமணி கேள்வி - பதில் அதை விட அற்புதம்.
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டி, குழந்தைகளையும் இளைஞர்களையும் கவரும் வகையில் தினமலர் தருகிறது.
எந்த சூழ்நிலையிலும் ஊடக தர்மத்தை துளியளவும் மாறாமல், சமரசம் இல்லாமல் சத்திய பாதையில் பாரபட்சமின்றி, ஒரு தராசு முள்ளைப் போல், 75 ஆண்டுகளாக செயல்பட்டது மிகவும் சிறப்பு. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்ற மகாகவி பாரதியாரின் வீர வரிகளுக்கு ஏற்ப, காகிதத்தையே ஆயுதமாக்கிய பெருமை தினமலருக்கு உண்டு.
ஊடகத்தின் கடமை செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது மட்டுமல்ல, சமூக பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வதும் கடமை தான். அந்த வகையில், பல இடங்களில் தீர்வையும் சொல்லக்கூடிய நாளிதழாக தினமலர் இருக்கிறது.
ஆங்கில எழுத்தாளர் எட்வட் புல்வர்ட் லிட்டன் கூறியதுபோல், வாள் முனையை போல் பேனா முனை வலிமையானது என்பதை, தினமலரின் 75 ஆண்டு கால வரலாறு நிரூபித்துள்ளது. நுாற்றாண்டை கடந்து வளர்ந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது மலர்களை தர வேண்டும்; மலர வேண்டும். உலகமெல்லாம் இருக்கக் கூடிய தமிழர்களின் இதயங்களில் தினமலர் மணம் வீசட்டும் என நெஞ்சார வாழ்த்துகிறேன்.
என்றும் கல்வி பணியில்...
ஆண்டவர் ராமசாமி
தாளாளர், விகாஸ் வித்யாலயா கல்வி குழுமம் மற்றும் வித்யாசாகர் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, திருப்பூர்
