தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/செய்தித்தாள் வாசிக்காதவர்கள்...

செய்தித்தாள் வாசிக்காதவர்கள்...

செய்தித்தாள் வாசிக்காதவர்கள்...


PUBLISHED ON : மார் 10, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்', 75ம் ஆண்டில் பயணித்துக்கொண்டு இருக்கும் நல்ல தருணத்தில், தினமலரின் பணி துவங்கிய, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில், வாழ்த்து தெரிவிப்பது, பொருத்தமாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மொழி, தகவல் பரிமாற்றம் ஆகியவை தான், இன்றைய மனித நாகரீகத்தின் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. தமிழ் பேசும் நல்லுலகில், தமிழ் மக்கள் செய்திகளை படித்து, தெரிந்து கொள்ளும் விதமாக துவக்கப்பட்ட தினமலர் நாளிதழ், குமரி மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து, இம்மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது என்பது வரலாறு.

அந்த காலகட்டத்தில், எங்கள் மாவட்ட மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை தினமலர் நாளிதழ் ஏற்படுத்தியது என்பதும் உண்மையே. இந்நாளிதழ் நடத்தி வரும் 'கல்வி வழிகாட்டி' நிகழ்வில், என்னையும் இணைத்துக்கொண்ட தினமலரை, நான் பாராட்டுவதோடு, நன்றி கூறுவது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மாணவ, மாணவியர் மத்தியில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பணிகள் குறித்தும், அந்த பொறுப்புகளுக்கு சென்றடையும் வழிமுறைகள் குறித்தும், தினமலர் நடத்திய நிகழ்வில் பேசிய நான், இன்றும் அந்தப் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன் என்றால், அதற்கும் தினமலர் நாளிதழ் ஒரு காரணமாகவே உள்ளது.

செய்தி பணியுடன், கல்வி பணியை இணையாக செய்து வரும் தினமலர், இன்று தகவல் தொழில் நுட்பம் விரிவாக்கம் அடைந்த நிலையில், 'இ பேப்பர்'- கொண்டு வந்து, அதன் சேவையை விரிவுப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

ஒரு இனத்தின் அடையாளம், மொழி. மொழியின் ஆபரணங்கள் கலாசாரம் மற்றும் பண்பாடு. இவை இரண்டையும் போற்றுவதுடன், அறிவியலுக்கு ஒவ்வாத பழக்கங்களை கைவிடவும் அறிவுறித்தியது, தினமலர் நாளிதழ். அறிவியல் சிந்தனையுடன், உலக குடிமக்களாக, நம் மக்கள் வாழத் தகுந்த செய்திகளை தொடர்ந்து வெளிப்படுத்தும், தமிழ் அச்சு ஊடகமாகவும் இருந்து வருகிறது தினமலர்.

ஏ.ஐ., தொழில்நுட்பம் பெருகிவிட்ட இன்றைய சூழலில், எது உண்மை, எது பொய் என்பதை கண்டறிய முடியாத நிலையில், தினமலரில் வந்தால் உண்மையாக இருக்கும் என்ற அளவிற்கு, நம்பகத் தன்மையை வளர்த்துக்கொண்ட ஊடகமாக, தினமலர் இருந்து வருகிறது.

தமிழகம் சட்டம் ஒழுங்கிலும், கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும், தனி மனித வருவாயிலும், அனைத்து சமுதாய குறியீட்டிலும், முன்னணி மாநிலமாக விளங்கி வரும் இக்காலக்கட்டத்தில், தகவல் பரிமாற்றத்தில் முன்னணியில் இருந்து வரும் தினமலர், தமிழ் சமுதாயம் அமைதியாகவும், அறிவிப்பூர்வமாகவும், அதிக அக்கறையுடனும் வாழும் விதமாக, செய்திகள் பரிமாறும் பணியை தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன்.

செய்தித்தாள் அன்றாடம் வாசிப்பது, நாகரீகமான ஒரு குடிமகனின் அடையாளமாகும். தொடர்ந்து வாசிக்காதவர்களுக்கு, நாட்டு நடப்பு தெரியாது, அவர்களுக்கு, பரந்து விரிந்த உலகம் தென்படாது. செய்தித்தாள் வாசிக்காதவர்களுக்கும், ஆப்பிரிக்க காடுகளில் வாழும் பூர்வக் குடிகளுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.

எனவே, நம் இளைய சமுதாயம், தினமும் அரை மணி நேரமாவது, செய்தித்தாள்களை கூர்ந்து வாசிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அல்லது வேண்டுகோளை, தினமலர் நாளிதழின் 75ம் ஆண்டில், வாழ்த்து செய்தியாக பதிவிடுகிறேன்.

தினமலருக்கு வாழ்த்துகள். தமிழ் வாசகர்களுக்கு வணக்கம்.

சி. சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., (பணி ஓய்வு)

தமிழ்நாடு காவல் துறை படைத் தலைவர் மற்றும் இயக்குனர்

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us