PUBLISHED ON : மார் 29, 2026 12:28 AM

திருப்பூரையும் தினமலரையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு திருப்பூரின் வளர்ச்சியில் தினமலரின் பங்களிப்பு இருந்து வருகிறது. எப்போதும் தேசியத்தின் பக்கம் நிற்கும் 'தினமலர்', 1998ல் நாட்டின் சுதந்திர பொன்விழாவை முன்னிட்டு நடத்திய ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 2022ல் நடந்த பவளவிழா ஓட்டத்திலும் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். இதன் மூலம் தேசபக்தியை திருப்பூர் மக்களின் உள்ளத்தில் அணையாத தீக்கனலாக இருக்கச் செய்கிறது தினமலர்.
திருப்பூர் பனியன் ஏற்றுமதி தொழிலுக்கு தினமலர் செய்து வரும் பங்களிப்பு அளப்பறியது. வேலை நிறுத்தப் போராட்டங்களால் தொழில் முடங்கிய போது, தொழில் தொடர்ந்து நடக்க வேண்டிய அவசியத்தை தினமலர் தனது எழுத்தின் மூலம் வலியுறுத்தியது. சாயப்பட்டறை பிரச்னையால் தொழில் முடங்கிய போது, அதிலிருந்து பனியன் தொழில்துறை மீள தொடர்ந்து எழுதியது தினமலர்.
அதே சமயம், சுற்றுச்சூழலை காக்கும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மிகப்பெரிய வெற்றியடைய தினமலரின் பங்களிப்பு மிக பெரியது. சுனாமி பேரிடர் மற்றும் சென்னை, கடலூர், கேரள மாநில வெள்ளப்பாதிப்புகளின் போது, மக்களின் துயர் துடைக்க, சேவாபாரதி சார்பில் நிவாரண நிதி மற்றும் பொருட்கள் திரட்டியது. அப்போது மக்கள் திரண்டு வந்து உதவிட தினமலரின் எழுத்துக்கள் முக்கிய காரணம்.
ஆண்டுக்கணக்கில் நீடித்த கொரானா பெருந்தொற்று காலத்தில் மக்களின் துயர்துடைக்கும் பணியில் எங்களுடன் கைகோர்த்து செயல்பட்டது தினமலர். இத்தகைய தினமலரின் வாசகர் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இந்த பவள விழா ஆண்டில் தினமலரின் சேவைகளை மனமார பாராட்டி, இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
'ஆர்ம்ஸ்ட்ராங்' ஈ.பழனிச்சாமி
நிர்வாக இயக்குனர், ஆர்ம்ஸ்ட்ராங் குழுமம் மற்றும் தலைவர், ஆர்எஸ்எஸ், திருப்பூர் கோட்டம்.
