PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

வாசகர்களுக்கு, அன்றாடம், இரண்டாம் உதயமாக திகழும் 'தினமலர்', முக்கால் நூற்றாண்டு கால பெருவெளியினை கடந்து, வெற்றி நடை போடும் இப்பெருமித தருணத்தில், நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தினமலரின் 75 ஆண்டு கால பயணத்தின் அடையாளம் செய்தி பணி மட்டும் அல்ல; சமுதாயத்தின் இருள் நீக்க வந்த ஒரு 'அறத் தவம்'. இதைத்தான் உபநிஷதம், 'தமஸோமா ஜ்யோதிர் கமய' என்கிறது. அதாவது, 'இருளிலிருந்து ஒளியை நோக்கி இட்டுச் செல்வாயாக' என கூறுகிறது.
நேர்மை எனும் விளக்கில் உண்மை எனும் ஒளியினை ஏற்றி அவைகளை நங்கூரத்தைப்போல் பற்றிக்கொண்டு, நவீன யுகத்தின் சவால்களுக்கு மத்தியிலும், சற்றும் சலனமின்றி 'உண்மையின் உரைகல்' எனும் உன்னத லட்சியத்தை உயிர்மூச்சாகக் கொண்டுள்ளது, ஊடக துறைக்கே பரைசாற்றும் திசைகாட்டி.
பல புதுமைகளின் பிறப்பிடமாக, ஆண்டின் 365 நாட்களும் செயல்பாடு, ஞாயிற்றுக்கிழமைகளில் இரு இதழ்கள், உள்ளூர்ச் செய்திகளுக்கு தனிப்பகுதி, எளிய மக்களையும் நாயகர்களாக்கிய மேன்மை ஆகியவை, பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய இலக்கணம்.
கவரும் தலைப்புகள், கண்களை தழுவும் நேர்த்தியான எழுத்துருக்கள், பருகும் நீர் போன்ற நடை என நீங்கள் செதுக்கும் ஒவ்வொரு இதழும் ஒரு கலைப்படைப்பு. இதைத்தான் மகாகவி பாரதியார் 'நல்ல காகிதம் செய்வோம்' என விழைந்தார்.
நான்கு தலைமுறை வாசகர்களின் அன்பை மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தின் இளம் நான்காம் தலைமுறை பதிப்பாளர்களின் அர்ப்பணிப்பையும் தன்னகத்தே தாங்கி,தேச நலன், ஆன்மீகம் போன்றவற்றை முன்னிறுத்தி கட்டியெழுப்பி வரும் இந்த கலாச்சார கோபுரம், வரும் நூற்றாண்டுகளிலும் செழித்தோங்க எல்லாம் வல்ல இறைவனையும், குருநாதர்களையும் பிரார்த்திக்கிறோம்.
வாழ்த்துகளுடன்,
டி.ஆர்.ராமநாதன்
நிறுவனர், பாரதி வித்யாஸ்ரம் சிறப்புப் பள்ளி, திருப்பூர்
