/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கோவை அரசு கலைக் கல்லூரியில் 18 பெண்கள் கழிவறைகள் திறப்பு!
/
கோவை அரசு கலைக் கல்லூரியில் 18 பெண்கள் கழிவறைகள் திறப்பு!
கோவை அரசு கலைக் கல்லூரியில் 18 பெண்கள் கழிவறைகள் திறப்பு!
கோவை அரசு கலைக் கல்லூரியில் 18 பெண்கள் கழிவறைகள் திறப்பு!
PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

கோவை;கோவை அரசு கலைக் கல்லூரியில், கழிவறை இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், தினமலர் நாளிதழின் செய்தியால், ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் 18 கழிவறைகள் திறக்கப்பட்டன.
கோவை அரசு கலைக் கல்லூரியில் கழிவறை பற்றாக்குறை, சுகாதாரமின்மை காரணமாக மாணவிகள் படும்பாடு குறித்தும், சிக்கலுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும், நமது நாளிதழில் 2023 மார்ச் 30ம் தேதி, செய்தி வெளியானது.
நமது செய்தியை படித்த, எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தினர், சமூக பொறுப்பு நிதி திட்டத்தில் கிரிஷா அறக்கட்டளை மூலம், சுமார் 33.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 18 கழிப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளனர்.
கழிப்பறை கட்டடத்தின் ஒப்படைப்பு விழா, அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு, அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் எழிலி, தலைமை வகித்தார். அரசியல் அறிவியல் துறைத் தலைவர் கனகராஜ் வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கழிப்பறை கட்டடத்தை திறந்துவைத்துப் பேசுகையில், இக்கல்லூரியில், கழிப்பிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்த கிரிஷா அறக்கட்டளைக்கு பாராட்டுகள். மாணவ, மாணவியரும் நன்றாக கல்வி கற்று, பிற்காலத்தில் சமூகப் பணியாற்ற முன்வர வேண்டும், என்றார்.
எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி நிறுவனத் தலைவர் சீனிவாசன் பேசுகையில், அரசு கலைக் கல்லூரியில் பெண்களுக்கு கழிவறை இல்லை என, பத்திரிகை செய்தி வாயிலாக அறிந்தேன். பெண்களுக்கு கழிவறை இல்லாமல் இருப்பது, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும்.
இதையடுத்து, கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல முறையில் மாணவிகள் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். கிட்டத்தட்ட 9 அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள் உள்ளிட்டவை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன, என்றார்.
நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.