/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
விளம்பர பதாகைகள், பலகைகளால் அபாயம் 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கண்டிப்பு
/
விளம்பர பதாகைகள், பலகைகளால் அபாயம் 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கண்டிப்பு
விளம்பர பதாகைகள், பலகைகளால் அபாயம் 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கண்டிப்பு
விளம்பர பதாகைகள், பலகைகளால் அபாயம் 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கண்டிப்பு
PUBLISHED ON : மே 31, 2024 12:00 AM

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 2,000க்கு மேற்பட்ட விளம்பர பதாகைகள், பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ராட்சத அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், பலகைகளால், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.
மேலும், அனுமதியற்ற விளம்பர பதாகைகள், பலகைகளுக்கு அனுமதி பெற, 20 கோடி ரூபாய் வரை பேரம் நடப்பதை சுட்டிக்காட்டி, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதில், மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதைபோல், சென்னையில் ஏற்படுவதற்கு முன் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இச்செய்தியை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகளின் 'வாட்ஸாப்' குழுவில், மண்டல அலுவலர்களை கண்டித்து பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் கூறியிருப்பதாவது:
மும்பை விபத்தை ஒப்பிட்டு, சென்னை மாநகரில் சட்ட விரோத விளம்பர பதாகைகள், பலகைகள் குறித்த பட்டியலை, சென்னை போலீஸ் கமிஷனர் வழங்கியிருப்பதுடன், அகற்றவும் வலியுறுத்தியுள்ளார். நானும், ஏற்கனவே அனுமதியற்ற விளம்பர பதாகைகள், பலகைகள் அகற்ற வலியுறுத்தியுள்ளேன்.
நடவடிக்கை எடுக்க தவறினால், எப்போது வேண்டுமானாலும், காற்று மற்றும் மழையால் விளம்பர பதாகைகள், பலகைகள் சரிந்து விபத்து ஏற்படுத்தலாம். இவை, அனைவரையும் சிக்கலில் ஆழ்த்தும்.
நீதிமன்றங்களின் அனுமதியுடன் இருக்கும், விளம்பர பதாகைகள், பலகைகளின் பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அத்துடன் அனுமதிக்கப்பட்ட அளவில் தான், விளம்பர பதாகைகள், பலகைகள் இருக்கின்றனவா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மண்டல அலுவலர்கள், விளம்பர பதாகைகள், பலகைகள் அகற்றுவதில் மெத்தனம் காட்டாமல் உடனடியாக அகற்ற வேண்டும்.
சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், பலகைகள் பாதுகாப்பான முறையில் அகற்ற, தொழில் முறை ஏஜன்சிகளை பயன்படுத்தலாம்.
அத்துடன், அண்ணா நகர், கோயம்பேடு பகுதியில், சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், பலகைகள் குறித்து சி.பி.ஐ.,யின் முன்னாள் இயக்குனர் புகார் அளித்துள்ளார். அதன்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.