/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
'தினமலர்' செய்தி எதிரொலி அரும்புலியூர் கிணற்றுக்கு விமோசனம்
/
'தினமலர்' செய்தி எதிரொலி அரும்புலியூர் கிணற்றுக்கு விமோசனம்
'தினமலர்' செய்தி எதிரொலி அரும்புலியூர் கிணற்றுக்கு விமோசனம்
'தினமலர்' செய்தி எதிரொலி அரும்புலியூர் கிணற்றுக்கு விமோசனம்
PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில், கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதற்காக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், 12.30 லட்சம் ரூபாய் செலவில், சீத்தாவரத்தில், கடந்த ஆண்டு புதியதாக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது.
அப்பகுதி மயானத்திற்கு மிக அருகே இந்த கிணறு உள்ளதால், சடலங்களை எரியூட்டும் போது புகை மற்றும் நச்சு தன்மையான புழுதி உள்ளிட்டவை குடிநீரில் பரவுதல் போன்ற பிரச்னைகள் உள்ளதாக கூறி, கிணற்று நீரை குடிநீராக உபயோகிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், புதிய குடிநீர் கிணறு பயன்பாட்டிற்கு வராமல் வீணாகியது.
இதுகுறித்தான செய்தி நேற்று முன்தினம், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, பவானி உள்ளிட்டோர் நேற்று அரும்புலியூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய குடிநீர் கிணற்றை ஆய்வு செய்தனர்.
கிணற்றின் ஆழம், நீர் இருப்பு போன்றவை குறித்து அளவீடு செய்து சுற்றிலும் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்த கிணற்றை நீர் ஆதாரமாக கொண்டு சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவு செய்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மூலம் நீர் பாசனம் செய்து பராமரிக்க ஆலோசிக்கப்பட்டது. பணி மேற்பார்வையாளர் பாஸ்கரன், அரும்புலியூர் ஊராட்சி தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.