/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் நாளிதழ் படம் எதிரொலி: தடுப்பணை கட்டுமானத்தை நிறுத்துங்க; கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
/
தினமலர் நாளிதழ் படம் எதிரொலி: தடுப்பணை கட்டுமானத்தை நிறுத்துங்க; கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தினமலர் நாளிதழ் படம் எதிரொலி: தடுப்பணை கட்டுமானத்தை நிறுத்துங்க; கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தினமலர் நாளிதழ் படம் எதிரொலி: தடுப்பணை கட்டுமானத்தை நிறுத்துங்க; கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM

உடுமலை: சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தும் படி கேரளா அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. தினமலர் நாளிதழ் வெளியான படம் அடிப்படையில் உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்து உள்ளது.
அமராவதி அணையின் முக்கிய நீராதாரத்தை தடுக்கும் விதமாக கேரளா அரசு தடுப்பணை கட்டி வருவது குறித்து நேரில் ஆய்வு செய்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், 'பாதிப்பில்லை' என, தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம்.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில், 946 சதுர கி.மீ., பரப்பளவு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளது.
வனப்பகுதிகளிலுள்ள காட்டாறுகள், ஓடைகள் என கேரளா மாநிலம் மூணாறு, தலையாறு பகுதியிலிருந்து பாம்பாறு; வால்பாறை கிழக்கு மலைப்பகுதிகளிலிருந்து சின்னாறு; கொடைக்கானல் மேற்கு மலைப்பகுதிகளில் இருந்து தேனாறு ஆகியவை முக்கிய நீர் வரத்து ஆறுகளாக உள்ளன.
அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் பாம்பாற்றின் குறுக்கே, பட்டிச்சேரி பகுதியில் ஏற்கெனவே கேரளா தடுப்பணை கட்டி வருகிறது.
இந்நிலையில் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகா, வட்டவடா பஞ்சாயத்து, பெருகுடா பகுதியில் சிலந்தை ஆற்றின் குறுக்கே மலைச்சரிவில், அமராவதி அணையின் நீர்வரத்தை தடுக்கும் வகையில் கேரளா அரசு மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்டி வருகிறது.
சிலந்தை நீர் வீழ்ச்சி அருகே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் கம்பக்கல் மலைச்சரிவிலிருந்து, மஞ்சம்பட்டி வழியாக தேனாறுக்கு வரும் நீர் தடுக்கப்படுகிறது. இதனால், அமராவதி பாசன பகுதிகள் பாதிக்கும்.
எனவே, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி அமராவதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதையடுத்து, அமராவதி பாசன கோட்ட அதிகாரிகள் குழு, கேரளா அரசு அணை கட்டும் பகுதியை நேரில் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகளை புகாரை தொடர்ந்து நேரில் ஆய்வு நடத்தப்பட்டது. வட்டவடா பஞ்சாயத்துக்குட்பட்ட ஆறு சிறிய கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவைக்காக மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட நிதியின் கீழ், கேரளா மாநில குடிநீர்த்துறை பங்களிப்புடன், ரூ.16 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடி செலவில் 40 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் உயரத்தில், 0.3 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவுடன் தினமும், 1.20 கனஅடி நீர் எடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
தற்போது, 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அமராவதி அணையில் தினமும் நீர் இழப்பு, 15 கனஅடியாக உள்ள நிலையில், மிகவும் குறைந்த அளவே, நீர் எடுத்து குடிநீருக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதனால், அமராவதி அணை நீர் வரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து, உயர் அதிகாரிகள் மற்றும் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
தடுப்பணை கட்டுமானம் நிறுத்தம்
இந்நிலையில் சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தும் படி கேரளா அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. தினமலர் நாளிதழ் வெளியான படம் அடிப்படையில் உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்து உள்ளது.