/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
அழியும் நிலையில் கல்வெட்டு படிகள்: ஆய்வு செய்ய தொல்லியல் துறை உத்தரவு
/
அழியும் நிலையில் கல்வெட்டு படிகள்: ஆய்வு செய்ய தொல்லியல் துறை உத்தரவு
அழியும் நிலையில் கல்வெட்டு படிகள்: ஆய்வு செய்ய தொல்லியல் துறை உத்தரவு
அழியும் நிலையில் கல்வெட்டு படிகள்: ஆய்வு செய்ய தொல்லியல் துறை உத்தரவு
PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

சென்னை: மத்திய தொல்லியல் துறையின் மைசூரு அலுவலகத்தில் இருந்து, சென்னைக்கு எடுத்து வரப்பட்ட தமிழ் கல்வெட்டு படிகள் அழியும் நிலையில் உள்ளது குறித்து, மார்ச் 13ம் தேதி, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, வல்லுனர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், படிகளை பாதுகாக்கவும், மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல தலைமை அலுவலகமான மைசூரில் உள்ள அலுவலகத்தில், 60,000த்துக்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டு படிகள் பாதுகாக்கப்பட்டன. காவிரி நதி நீர் விவகாரத்துக்கு பின், அவை அழிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை தமிழகத்தில் பாதுகாத்து ஆவணப்படுத்த உத்தரவிட்டது. அதன்படி, 2022ல் 17,000 தமிழ் கல்வெட்டு படிகள் மட்டும், சென்னையில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்டன.
அவற்றை பாதுகாக்க, 'ஏசி' அறை வசதி, தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்காததால், கோடை வெயிலின் தாக்கத்தால் கல்வெட்டு படிகள் சிதையும் நிலைக்கு சென்றுஉள்ளன.
இதுகுறித்த நம் நாளிதழ் செய்திக்கு பின், மத்திய தொல்லியல் துறையின் பொது இயக்குனர், கல்வெட்டுப் படிகளின் நிலையை, வல்லுனர் குழு வாயிலாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, மைசூரு மண்டல இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், டேராடூனில் உள்ள வேதியியல் பிரிவு வல்லுனர்கள், மைப்படிகளின் தற்போதைய நிலை குறித்து, அறிவியல் முறையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அதனால், நேற்று முன்தினம் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள், கல்வெட்டு மைப்படிகள் உள்ள பெட்டிகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியதாவது:
தமிழகத்திற்கு எடுத்து வரப்பட்ட மைப்படிகளின், 'டிஜிட்டல்' வடிவங்களை, சென்னை அலுவலகத்தில் வைத்துக் கொண்டு, அசல் படிகளை, ஊட்டியில் உள்ள அலுவலகத்தில் பாதுகாத்தால் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், அவை பாதிக்கப்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.