/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி; அழுகிய பழங்கள், குளிர்பானங்கள் பறிமுதல்
/
உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி; அழுகிய பழங்கள், குளிர்பானங்கள் பறிமுதல்
உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி; அழுகிய பழங்கள், குளிர்பானங்கள் பறிமுதல்
உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி; அழுகிய பழங்கள், குளிர்பானங்கள் பறிமுதல்
PUBLISHED ON : மே 08, 2024 12:00 AM

கோவை;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அழுகிய பழங்கள், நிறமிகள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.கோடை வெயில் காரணமாக கோவையில் பழ ஜூஸ் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதைபயன்படுத்தி ஒரு சில கடைகளில் தரமற்ற நீரை பயன்படுத்தி, பழரசங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதாகவும், அழுகிய பழங்களை கொண்டு பழரசங்கள் தயாரிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து களத்தில் இறங்கிய உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒன்பது குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டது.மாவட்டம் முழுவதும், 378 கடைகளில் நடந்த ஆய்வில், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், அதிகளவு நிறமிகள் கலக்கப்பட்ட ரோஸ்மில்க், பாதாம்கீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், ஆகியவைகள், 280 லிட்டர், தர்பூசணி உள்ளிட்ட அழுகிய பழங்கள், 258 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இவற்றை விற்பனை செய்த, 81 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது; 24 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய ஒன்பது கடைகளுக்கு, ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில், நடத்தப்பட்ட ஆய்வில், வேனில் இருந்து அதிகளவு நிறமிகள் கலக்கப்பட்ட குளிர்பானங்களை இறக்கிக் கொண்டிருந்த குனியமுத்துாரை சேர்ந்த அபுபக்கரிடம் விசாரிக்கப்பட்டது.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், குனியமுத்துார் அம்மன் கோவில் ரோட்டில், செயல்பட்டு வந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, ரோஸ்மில்க், பாதாம்கீர் பாட்டில்கள் தலா, 100, நன்னாரி பாட்டில்கள், 300, வேறு நிறுவனத்தின் பெயர் கொண்ட எலுமிச்சை குளிர்பானங்கள் பாட்டில்கள், 125, பறிமுதல் செய்யப்பட்டன. இதிலிருந்து, 5 உணவுமாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பாணிபூரி விற்பனை செய்யும் கடைகளில், நடத்தப்பட்ட ஆய்வில், ஆறு சில்லரை விற்பனையாளர்கள், இரு தயாரிப்பு நிறுவனங்களில் அதிக நிறமி சேர்க்கப்பட்ட, 45 லிட்டர் பாணிபூரி மசாலா, 46 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு, 15 கிலோ உருளைக்கிழங்கு மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அதில், 4 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வக முடிவின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட உணவுப்பாது காப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''உணவு வணிகம் புரியும், பேக்கரிக்கள், குளிர்பானக்கடைகள், ஓட்டல்கள், பழமுதிர் நிலையங்கள், அதிக நிறமி சேர்க்கப்பட்ட, லேபிள் விபரம் இல்லாத குளிர்பானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், விற்றவர், உற்பத்தி செய்தவர் என, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக நிறமி சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி பருக வேண்டாம். பொதுமக்கள் இதுகுறித்து துறையின், வாட்ஸ்அப் எண், 94440 42322 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.

